சூலுார்; கிராமப்புற மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கவும், அவர்களின் திறனை வளர்க்கவும் ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானங்கள் பராமரிப்பு இன்றி மாயமாகி விடுகின்றன.
கிராமப்புற இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்கப்படுத்த தமிழக அரசு சார்பில், அனைத்து ஊராட்சிகளிலும், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மைதானங்கள் அமைக்கப்பட்டன.
அந்த வகையில், சூலுார் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டன. தலா ஒரு லட்சம் ரூபாய் செலவில் வாலிபால், டென்னிஸ், கிரிக்கெட் உள்ளிட்டவைகளை விளையாட மைதானங்கள் அமைக்கப்பட்டன.
மேலும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதலுக்கான உபகரணங்கள், உடற்பயிற்சி செய்ய உபகரணங்களும் நிறுவப்பட்டன. சிறுவர், சிறுமியர்கள் விளையாட, சறுக்கு தளம், ஊஞ்சல் உள்ளிட்ட உபகரணங்கள் அமைக்கப்பட்டன. கையெறி குண்டு, பளு தூக்கும் பெஞ்ச் பிரஸ், பூப்பந்து, நெட் பேட், செஸ், கேரம் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தன.
இவற்றை பயன்படுத்தி பயிற்சி மேற்கொண்டு திறன்களை மேம்படுத்தி கொள்ள, கிராமப்புற இளைஞர்கள், மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
பொழுது போக்குக்காக அல்ல
இத்திட்டத்தின் கீழ் கிராம, ஒன்றிய, மாவட்ட மாநில அளவில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன. இத்திட்டம், கிராம இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் விளையாட்டின் மீது ஆர்வத்தை தூண்டியது. உடற்பயிற்சிகள் மூலம் உடலுக்கு வலிமையும், ஆரோக்கியமும் கிடைத்ததால், வெறும் பொழுது போக்குவதற்காக அல்லாமல், ஆர்வத்துடன் பயன்படுத்தி வந்தனர்.
பராமரிப்பு இல்லாமல் பாழ்
துவக்கத்தில் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்த மைதானங்கள் நாளடைவில், கண்டு கொள்ளாமல் விடப்பட்டன. தனி அதிகாரிகள் ஆட்சி, ஆட்சி மாற்றம், பராமரிக்க ஆட்கள் இல்லாதது, தொடர் செயல்பாட்டுக்கு நிதி ஒதுக்காதது உள்ளிட்ட
காரணங்களால் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு மையங்கள், மைதானங்கள் பாழாயின. மேலும், பல இடங்களில், விளையாட்டு உபகரணங்கள், பொருட்கள் ஒவ்வொன்றாக திருட்டு போய், இப்போது, உபகரணங்கள் இல்லாத நிலை உள்ளது.
இதுகுறித்து விளையாட்டு வீரர்கள் கூறியதாவது: விளையாட்டு திறனை மேம்படுத்த கொண்டு வரப்பட்ட திட்டத்தின் மூலம், கிராமப்புற மாணவர்கள் இளைஞர்கள் பயன் பெற்றனர்.
ஆனால், தொடர்ந்து பராமரிக்கப்படாததால், தற்போது மைதானங்கள் காணாமல் போய்விட்டன. ஒரு சில ஊராட்சி தலைவர்கள் மட்டும் அக்கறையுடன் பாராமரித்து வருகின்றனர். மாணவர்கள், இளைஞர்களின் ஆர்வத்தை தக்க வைத்துக்கொள்ள, விளையாட்டு மைதானங்களை புதுப்பிக்க வேண்டும். ஓய்வு பெற்ற விளையாட்டு ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்களை மையத்தை பராமரிக்க நியமித்தால் நல்ல பலன் கிடைக்கும். இவற்றை கருத்தில் கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.