இலவச கட்டாய கல்வி திட்டத்தில் சேர்க்கப்பட்ட குழந்தைகளிடம் கட்டணம் வசூலிப்பதாக புகார் – வருவாய் கோட்டாட்சியரிடம் மனு

0
87
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது கோட்டூரை அடுத்த பொங்காளியூரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பொங்காளியூரில் சுமார் 20 குடும்பங்களுக்கு மேல் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். தினமும் கூலி வேலைக்கு சென்று வரும் எங்களால் வாடகை கொடுக்க முடியவில்லை. எங்களுக்கு குடியிருக்க இடமோ, வீடோ இல்லை. எனவே அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நாயக்கன்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாயக்கன்பாளையத்தில் சுமார் 25 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் சென்று வருவதற்கு சாலை வசதி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலை பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுதொடர்பாக ஊராட்சி செயலாளர், வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் கிராமசபை கூட்டத்தில் வலியுறுத்தியும் சாலை அமைக்கவில்லை. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கான்கீரிட் சாலை அமைத்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர் மற்றும் பெற்றோர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் குழந்தைகளை பொள்ளாச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்தோம். தற்போது பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்கின்றனர். மேலும் கட்டணம் செலுத்தினால் படிக்க முடியும் என்று வற்புறுத்துகின்றனர். மேலும் சில குழந்தைகளை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டனர். எனவே கல்வி கட்டணம் இல்லாமல் தொடர்ந்து குழந்தைகள் படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.