இலவசமாக நொச்சி கன்று பெற விவசாயிகளுக்கு அழைப்பு

0
25

அன்னுார்; நொச்சி மற்றும் ஆடாதோடா கன்றுகள் பெற வேளாண்துறை விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அன்னுார் வட்டார வேளாண் உதவி இயக்குனர் பிந்து வெளியிட்டுள்ள அறிக்கை :

ஆடாதோடா, நொச்சி ஆகிய இலைகளில் பூச்சிகளை விரட்டும் தன்மை உள்ளது. இயற்கை விவசாயத்தில் பயன்படுகிறது. இதன் இலைகளில் உள்ள வாசிசீன் என்னும் அல்கலாய்டுகளால் இலைகள் கசப்பு தன்மை கொண்டிருக்கும்.

இதை பூச்சி விரட்டியாக, வயல்களிலும், தானிய சேமிப்பு கிடங்குகளிலும் பயன்படுத்தலாம். ஆடாதோடா நொச்சி இலைகளை ஐந்து கிலோ அளவுக்கு எடுத்து கூழாக்கி 10 லிட்டர் நீரில் ஊறவைத்து வடிகட்டி அந்த நீரை பயிர்கள் மீது தெளித்தால் பூச்சி நோய்களை கட்டுப்படுத்தலாம்.

விளைச்சல் அதிகரிக்கும். வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படும். இது இயற்கையான பூச்சி விரட்டியாகும். ரசாயன பூச்சிக் கொல்லி மருந்தின் பயன்பாடு குறையும். மண்வளம் மேம்படும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். சாகுபடி செலவு குறையும். விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்.

ஒரு விவசாயிக்கு, நொச்சி கன்று 25, ஆடாதோடா கன்று 25 வழங்கப்பட உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தையோ அல்லது அந்தந்த பகுதி உதவி வேளாண் அலுவலரையோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.