இறைச்சிக்காக வேட்டையாடப்படும் பறவைகள்; தடுப்பு நடவடிக்கை அவசியம்

0
7

பொள்ளாச்சி; இறைச்சிக்காக பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க, சிறப்புக் குழு அமைத்து கண்காணிப்பதுடன் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள நீராதாரமிக்க ஏரிகள், குளங்கள் மற்றும் தடுப்பணைகள் உள்ளிட்ட பகுதிகளில் அதிகப்படியான பறவையினங்கள் காணப்படுகின்றன.

இவற்றை இறைச்சிக்காகப் பிடித்து விற்பனை செய்வோர், வலை உள்ளிட்ட சாதனங்களுடன் அவ்வப்போது திரிந்து வருவதை காண முடிகிறது.

வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் படி, இது போன்று பறவைகளை பிடிப்பது குற்றம் என, வனத்துறையினர் எச்சரித்தாலும், அவர்கள் கண்டுகொள்வது கிடையாது.

அவ்வாறு பிடிக்கப்பட்ட பறவைகள் பறிமுதல் செய்யப்பட்டாலும், மீண்டும் அவற்றை பறக்க விடும் நிலையே இருப்பதால், இத்தகைய அத்துமீறல் தொடர்கிறது. எனவே, பறவைகளை பிடிப்பது குற்றம் என, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, வனத்துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தன்னார்வலர்கள் கூறியதாவது:

பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் உள்ள நீர்நிலை பகுதிகளில், கொக்கு, மடையான், குயில் உள்ளிட்ட பறவைகள் அதிகம் காணப்படுகிறது. சிலர், இறைச்சிக்காக, பறவைகளை, சுருக்கு, வலை வைத்து பிடிக்க முற்படுகின்றனர்.

இதனைத்தடுக்க, நீர்நிலை ஒட்டிய பகுதிகளில் பறவைகள் பிடிக்கப்படுவது குறித்து, தகவல் தெரிவிக்கும் வகையில் தொடர்பு எண் வெளியிடப்பட வேண்டும்.

பறவைகள் பிடிப்போர் குறித்து, கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.