இரு சக்கர வாகனத்தில் வரும் 2 பேரும் ஹெல்மெட் அணிந்திருந்தால் 1 லிட்டர் பெட்ரோல் பரிசு

0
5

கோவை. ஜன. 23: இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வருபவரும் ஹெல்மெட் அணிந்திருந்தால் 1 லிட்டர் பெட்ரோல் பரிசாக போக்குவரத்து போலீசார் வழங்கினர். கோவை மாநகரப் பகுதியில், விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். விபத்துகளில் தலையில் காயம் ஏற்படுவதாலே அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனால் போலீசார் இருசக்கர வாகனங்களில் செல்வோரை ஹெல்மெட் அணிய கட்டாயப்படுத்தி வருகின்றனர். மேலும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வருபவருக்கு ரூ.1000 வரை அபராதமும் விதிக்கப்படுகிறது. இதேபோல ஹெல்மெட் அணிபவர்களை போக்குவரத்து போலீசார் ஊக்குவித்தும் வருகின்றனர்.

அதன்படி ரேஸ்கோர்ஸ் போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனங்களில் வரும் வாகன ஓட்டியும், பின்னால் அமர்ந்து வருபவரும் ஹெல்மெட் அணிந்து வந்தால் பரிசு வழங்க முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை போக்குவரத்து போலீசார் அண்ணா சிலை பகுதியில் இருசக்கர வாகனங்களில் 2 பேரும் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் குப்பன் பரிசாக வழங்கினர். 50 வாகன ஓட்டிகள் இந்த பரிசை பெற்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘ஹெல்மெட் அணிவதை ஊக்குவிக்கும் வகையிலும், விபத்தில் உயிர் இழப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்த பரிசு வழங்கப்பட்டது. தற்போது மோட்டார் சைக்கிள்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிந்து செல்வது அதிகரித்து வருகிறது’’ என்றனர்.