பா.ம.க. இளைஞரணி தலைவர்அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேற்று மூலவைகை ஆறு உற்பத்தியாகும் வாலிப்பாறை கிராமத்தில் இருந்து ‘வைகை ஆற்றை காப்போம்’ என்று வைகை மீட்பு பிரசாரத்தை தொடங்கினார். வாலிப்பாறை கிராமத்திற்கு வந்த அவரை கிராம மக்கள் வரவேற்றனர்.
வாலிப்பாறை அரசு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்ட அவர், அதன்பின்னர் மூலவைகை ஆற்றுக்கு சென்று பார்வையிட்டார். மேலும் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:–
தமிழகத்தில் வைகை ஆறு முக்கியமான ஆறாக விளங்குகிறது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வைகை ஆறு நீராதாரமாக உள்ளது. ஒரு காலக்கட்டத்தில் மூலவைகை ஆற்றில் ஆண்டின் 11 மாதங்கள் வரை நீர்வரத்து இருந்தது. ஆனால் தற்போது மரம் வெட்டி அழித்தல், மணல்கடத்தல் உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான சமூக விரோத செயல்கள் காரணமாக மழை அளவு மிகவும் குறைந்து வைகை ஆறு நீர்வரத்து இல்லாமல் வறண்ட நிலையில் காணப்படுகிறது. இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டதால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்துள்ளது. மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வைகை ஆற்றில் ரசாயன கழிவுகள், சாக்கடை கழிவுகள் கலந்து மாசடைந்து உள்ளது.
இதற்கு முன்பு பா.ம.க.சார்பில் தாமிரபரணி, காவிரி ஆறுகள் குறித்து பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது வைகை ஆறு மீட்பு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. பொதிகை மலைப்பகுதி புலிகள் சரணாலயமாக மாற்றப்பட்ட பின்னர் தாமிரபரணிக்கு நீர்வரத்து அதிகரித்தது. மூலவைகை ஆறு உற்பத்தியாகும் வெள்ளிமலை வனப்பகுதியில் தேக்கு உள்ளிட்ட மரங்கள் ஏராளமாக வெட்டி அழிக்கப்பட்டது. அதன்காரணமாகவே வெள்ளிமலை வனப்பகுதியில் மழையின் அளவு குறைந்து போனது. எனவே வெள்ளிமலை வனப்பகுதியை புலிகள் சரணாலயமாக மாற்ற வேண்டும்.
71 அடி கொள்ளளவு உடைய வைகை அணையை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும். அல்லது சட்டரீதியாக அணுகுவோம். கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு முல்லைப்பெரியாறு அணை 142 அடியாக உயர்த்தப்பட்டதே காரணம் என அந்த மாநில அரசு பொய் பிரசாரம் செய்து வருகிறது. 138 அடி மட்டுமே முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும் என கேரளஅரசு சுப்ரீம் கோர்ட்டில் வாதம் செய்து வருகிறது. இதற்கு அ.தி.மு.க. அரசு வழக்கம் போல மவுனம் சாதித்து வருகிறது. தற்போது நடைபெறும் அரசு தமிழகத்திற்கு கேடாக உள்ளது. மக்கள் உரிமைகளை பறிக்கும் அரசாக உள்ளது.
மது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய சீரழிவு உண்டாக்கும். பெண்கள் மத்தியில் பூரண மதுவிலக்கு குறித்து பிரசாரம் மேற்கொள்ளப்படும்.
சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் வருகிறதா அல்லது தனித்தனியாக நடைபெறுகிறாத என தெரிந்த பின்னர் பா.ம.க. கூட்டணி நிலைப்பாடு குறித்து தலைமை அறிவிக்கும். மின்னணு வாக்கு எந்திரத்தில் முறைகேடுகள் நடக்க அதிக அளவில் வாய்ப்பு உள்ளது. எனவே வாக்குச்சீட்டு தேர்தல் முறையே அனைத்துக்கட்சியினரின் விருப்பமாக உள்ளது. தற்போது பா.ஜனதா கட்சி மட்டுமே மின்னணு வாக்கு எந்திரம் பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறது.
தமிழகத்தில் அனைத்து ஆறுகளிலும் தடுப்பணைகள், அணைகள் கட்ட வேண்டும். ஆனால் அரசு அதில் கவனம் செலுத்தாமல் தேவையற்ற திட்டங்களை செய்து வருகிறது. தற்போது நடைபெற்று வரும் சென்னை–சேலம் பசுமைவழிச்சாலை முதல்–அமைச்சர் பழனிசாமிக்கு மட்டுமே பயன்படும். பசுமைவழிச்சாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.10ஆயிரம் கோடியை கொண்டு தமிழக்தில் அணைகள், தடுப்பணைகள் கட்டினால் தண்ணீரை சேமித்து விவசாயத்தை பசுமையாக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.