இம்முறை வாக்காளர் பட்டியலில் தவறே இருக்கா து ,தயாரிப்பு பணி 97 சதவீதம் ‘ஓவர்’ அடுத்த மாதம் வெளியிட ஏற்பாடு

0
14

கோவை: வாக்காளர் பட்டியலில் எவ்வித குளறுபடிகளும் ஏற்படாத வகையில், சிறப்பு சுருக்க திருத்தப்பணிகளை, தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். 97 சதவீதப்பணிகள் நிறைவடைந்துள்ள சூழலில், வரும் ஜன.,6ல் பட்டியல் வெளியிடப்படுகிறது.

கடந்த லோக்சபா தேர்தலில், கோவை வடக்கு, தெற்கு மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளில் உள்ள பெரும்பாலான வாக்காளர்களின் பெயர்கள், பட்டியலில் இல்லாமல் விடுபட்டதோடு, பட்டியலிலிருந்து வாக்காளர் பெயர்கள், கொத்து கொத்தாக நீக்கப்பட்டிருந்தன. இதனால் சில அரசியல் கட்சியினர், தேர்தல் நாளன்று போராட்டத்தில் இறங்கினர்.

தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் கலெக்டர் உள்ளிட்டோர், நிலமையை புரிந்து கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக, கோவை மாவட்டத்திலுள்ள பத்து சட்டசபை தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பட்டியலை, தொகுதி வாரியாக

வரிசைப்படுத்தி, உண்மையான வாக்காளர்கள் ஓட்டு செலுத்துவதற்கான ஏற்பாடுகளை, கடந்த ஓராண்டாக செய்து வருகின்றனர். இறுதிக்கட்டப்பணி தற்போது நடந்து வருகிறது.

கடந்த மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், நீக்குவதற்கும், திருத்தம் செய்வதற்கும், முகவரி மாற்றம் செய்வதற்கும், வாக்காளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. நான்கு நாட்கள் நடந்த இந்த முகாமில், 1,44,511 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன.

ஆன்லைன் வாயிலாக மட்டும், 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன.

நேரடியாக கொடுத்த விண்ணப்பத்திலுள்ள தகவல்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்ற, கள ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.

அதற்காக விண்ணப்பங்கள், தொகுதி மற்றும் தாலுகா வாரியாக பிரித்து, 3,117 வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், ஓட்டுப்பதிவு நிலைய அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட, தேர்தல் பணி மேற்கொள்பவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன.

கள ஆய்வுக்குப் பின், அவை வாக்காளர் பட்டியலில் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டன. இதுவரை 97 சதவீதப்பணிகள் நிறைவடைந்துள்ளன.

வரும் ஜன.,6ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், திருத்தி அமைக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை, கலெக்டர் கிராந்திகுமார் வெளியிடுகிறார்.

இது குறித்து, கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:

கடந்த லோக்சபா தேர்தலின் போது, தங்கள் ஓட்டுக்கள் காணாமல் போனதாக சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இனி அது போன்று இனி நடக்க வாய்ப்பு இல்லை.களப்பணியை மிகுந்த கவனத்துடன் மேற்கொண்டிருக்கிறோம்.

ஒரு முறைக்கு இரு முறை விசாரித்து, ஆதாரங்களை சரிபார்த்து பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டிருக்கிறோம். வாக்காளர் பட்டியல் பிழையின்றி சரியாக இருக்கும்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.