இன்று முதல் பொங்கல் தொகுப்பு வினியோகம்; ரேஷன் கடைகளுக்கு கரும்புகள் அனுப்பி வைப்பு

0
7

பொங்கல் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு கரும்புகள் அனுப்பப்பட்டன.

தமிழகத்தில், தைப்பொங்கல் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும், பொங்கல் தொகுப்பு பரிசாக வழங்கப்படுகிறது.

அதன்படி, நடப்பாண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்க பொதுமக்களுக்கு, ‘டோக்கன்’ கடந்த சில நாட்களாக வினியோகம் செய்யப்பட்டது.

பொள்ளாச்சியில், வீடு, வீடாகச்சென்று ரேஷன் பணியாளர்கள், ‘டோக்கன்’ வினியோகம் செய்தனர்.

அதில், கடையின் பெயர், குடும்ப அட்டை தாரர் பெயர், குடும்ப அட்டை எண், கிராமம் அல்லது தெரு பெயர் குறிப்பிடப்பட்டும், எந்த தேதியில், எந்த நேரத்துக்கு வர வேண்டும் என்ற தகவல் குறிப்பிடப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டது.

இன்று முதல்…

இன்று முதல் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்காக, கடைகளுக்கு பொருட்கள் மற்றும் கரும்பு அனுப்பும் பணிகள் நடக்கின்றன. அதில், கரும்பு கடைகளுக்கு அனுப்பும் பணி, பொள்ளாச்சி அரசு கல்லுாரி அருகே உள்ள காலியிடத்தில் இருந்து வாகனங்கள் வாயிலாக அனுப்பப்படுகின்றன

அதிகாரிகள் கூறுகையில், ‘பொள்ளாச்சியில், 145 ரேஷன் கடைகளில், 93,100 கார்டுதாரர்களும், ஆனைமலையில், 101 கடைகளில், 62,042; வால்பாறையில், 43 கடைகளில், 15,600, கிணத்துக்கடவு, 58 ரேஷன் கடைகளில், 33,900 கார்டுதாரர்களும் உள்ளனர். இவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க டோக்கன் வினியோகிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு வழங்குவதற்காக மொத்தம், 2,05,000 கரும்புகள் கடைகளுக்கு அனுப்பும் பணி நடைபெறுகிறது. அதில், 14,000 கரும்புகள் மட்டும் இன்று (நேற்று) மாலைக்கு வந்ததும், கடைகளுக்கு அனுப்பப்படும்,’ என்றனர்.

உடுமலை

– ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கும் பணி இன்று முதல் துவங்கவுள்ளது. இதற்கான டோக்கன்கள் பெருமளவு கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

தமிழக அரசு ரேஷன் கடைகளில் அரிசி கார்டு வைத்துள்ள கார்டுதாரர்கள் மற்றும் இலங்கை முகாம்வாசிகளுக்கு பொங்கல் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.

அவ்வகையில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு ஆகியன வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பயனாளிகளுக்கு வரிசைப்படி டோக்கன் வழங்கி அதனடிப்படையில் இப்பரிசு பொருள் வழங்கப்படவுள்ளது.

ரேஷன் கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் பொருள் வழங்குவதில் ஏற்படும் குளறுபடிகள் போன்றவற்றை தவிர்க்க இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதன்படி கடந்த, 3ம் தேதி முதல் ரேஷன் கடைவாரியாக, ஊழியர்கள் தங்கள் கடைக்கு உட்பட்ட கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஒன்பது தாலுகாக்களில் மொத்தம், 1,135 ரேஷன் கடைகள் உள்ளன.

இவற்றில் 7,98,856 அரிசி கார்டுகளும், 324 இலங்கை முகாம்வாசிகள் கார்டுகள் என மொத்தம், 7,99,180 கார்டுகளுக்கு பொங்கல் பரிசு பொருள் வழங்கப்படவுள்ளது. வீடுவீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணி, நேற்று வரை ஏறத்தாழ 90 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது.

இன்று (9ம் தேதி) முதல் பொங்கல் பரிசு பொருள் வினியோகம் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.