இன்று சில்லென்று பிறக்கிறது மார்கழி; நாமசங்கீர்த்தன உற்சவம் துவங்குகிறது

0
96

கோவை ; மார்கழி பிறப்பை போற்றி, இன்று பெருமாள் கோவில்களில் நாமசங்கீர்த்தன உற்சவங்களும், உஞ்சவிருத்தி பஜனைகளும் நடக்கின்றன.

தனுர் மாதம் என்றழைக்கப்படும் மார்கழியில், வழக்கமான வேத மந்திரங்களுக்கு பதிலாக திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, பாசுரங்களை சேவித்து இறைவனுக்கு வழிபாடு செய்யப்படும்.

ராம்நகர் கோதண்டராமர் கோவிலில், இன்று அதிகாலை சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து, ராம்நகர் திருப்பாவை கமிட்டி சார்பில், ராமர் கோவில் பஜனை குழுவினர், காலை 5:00 மணிக்கு நாமசங்கீர்த்தன உற்சவத்தையும், உஞ்சவிருத்தி பஜனைகளையும் மேற்கொள்கின்றனர்.

இதே போல் பெரியகடைவீதி லட்சுமிநாராயண வேணுகோபால சுவாமி கோவில், உக்கடம் லட்சுமி நரசிம்மர், கல்யாணவெங்கட்ரமண சுவாமி கோவில் டி.கே.மார்க்கெட், சலிவன் வீதி வேணுகோபாலசுவாமி கோவில்களிலும், நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி நடக்கிறது.

ராமர் கோவில் பஜனை கோஷ்டி தலைவர் பரசுராமன் கூறுகையில், ”எங்களுக்கெல்லாம் வயதாகிவிட்டது. இளைய தலைமுறையினர் இது போன்ற நாமசங்கீர்த்தன நிகழ்ச்சிகளில் பங்கேற்று, வரும் தலைமுறையினருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கு பக்தியும், ஈடுபாடும் மிக முக்கியம்,” என்றார்.