இனி, ‘ டிஜிட்டல் பாஸ்! ‘ அரசு பஸ்களில் அறிமுகம்! காகித பாஸ்களுக்கு டாட்டா

0
5

கோவை; அரசு பஸ்களில் பயணிக்கும் பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, காகித பாஸ்களுக்கு பதிலாக, ‘டிஜிட்டல்பாஸ்’ வழங்கும் திட்டத்தை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளது.

கோவையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், 836 டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்து கழகங்களை, நவீன தொழில்நுட்பங்களுடன் டிஜிட்டல் மயமாக்கி, மக்களுக்கு பஸ் சேவைகளை எளிமைப்படுத்த, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர பஸ்களின் வருகை குறித்து அறிய, ‘பஸ்’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில், பஸ் எந்த சாலையில் வந்து கொண்டிருக்கிறது என்பதை, பஸ்சில் பொருத்தியுள்ள, ஜி.பி.ஆர்.எஸ்.,கருவி வாயிலாக, தெரிந்து கொள்ளலாம்.

இதன் தொடர்ச்சியாக, பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக, சென்னையில் உள்ளதை போன்று, ‘டிஜிட்டல்’ சேவையை கோவை பயணிகளுக்கு வழங்க, அரசு போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது.

டிஜிட்டல் பஸ் பாஸ்

இதற்காக முதற்கட்டமாக, ‘ டிஜிட்டல் பஸ் பாஸ்களை’ அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருகின்றன. இதன் வாயிலாக, பஸ் பாஸ் பிரிண்ட் செய்யும் செலவு குறைகிறது. அதோடு, பயணிகள் எளிதாக பயணம் செய்ய முடியும் என்றும் அரசு நம்புகிறது.

இந்த டிஜிட்டல் பஸ் பாசிற்கு, கட்டணம் செலுத்தினால் ஒரு கார்டு வழங்கப்படும். அந்த கார்டை பெற்றுக்கொண்டு, அதில் தொடர்ந்து பணத்தை ‘ரீசார்ஜ்’ செய்து கொள்ளலாம்.

அந்த கார்டை, கண்டக்டர் தன்னிடம் உள்ள ‘டிஜிட்டல்’ இயந்திரத்தில், ‘டச்’ செய்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். கட்டணம் பரிவர்த்தனை ஆகி விடும்.

இதைத்தொடர்ந்து, வழக் கமாக பயணிக்கும் பயணிகளுக்கும், டிஜிட்டல் கார்டு வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத, கோவை கோட்ட அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பஸ் பாஸ், டிக்கெட்டிற்கு பதிலாக, டிஜிட்டல் கார்டு ஆகிய அனைத்திற்கும் ‘நியர் பீல்டு டெக்னாலஜி’ (என்.எப்.சி.) என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை, அனைத்து டவுன் பஸ்களிலும் மிக எளிதாக பயன்படுத்த முடியும்.

தற்போது கண்டக்டர்கள் பயன்படுத்தி வரும், மின்னணு டிக்கெட் வழங்கும் கருவியில், டிஜிட்டல் பயண அட்டையை ‘டச்’ செய்த உடன், பயண அட்டையில் இருந்து பயணத்துக்கு தேவையான பணம், போக்குவரத்துக்கழக வங்கி கணக்கிற்கு சென்றுவிடும்.

இந்த டிஜிட்டல் பயண அட்டையை, பயணிகள் முன்கூட்டியே ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் போக்குவரத்து கழகத்துக்கும், பயணிகள் பயணிப்பதற்கு முன்பே கணிசமான தொகை கிடைக்கும்.

இவ்வாறு, அவர் கூறினார்.