கோவை: கோவை குரும்பபாளையத்தில், ஆனந்த சைதன்யா தியான மையம் துவக்க விழா நேற்று நடந்தது. தியான மையத்தை துவக்கி வைத்து, எழுத்தாளர் ஜெயமோகன் பேசியதாவது:
இப்போது நவீன காலத்தில், ஒரே தலைப்பை நான்கு நாட்களுக்கு திரும்ப திரும்ப கதைத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த கால அளவு நீண்ட தொடராக இருப்பதை, இப்போதைய சமூக வலைதளங்கள் துண்டு, துண்டாக, சல்லி சல்லியாக நெருக்கி தருகின்றனர்.
20 நிமிடம் பார்க்க முடியாத ஒரு தொடரை, ரீல்ஸ்களாக மாற்றி விட்டனர். இவை, 1 நிமிடம், 2 நிமிடம் நேரம் குறைந்து, இப்போது 30 செகண்டுகளாக மாற்றி விட்டனர்.
யு டியூபில் 1 மணி நேரத்திற்கு பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. உலகம் முழுவதும் இந்த நேரம் குறைந்துள்ளது. நம் உள்ளத்தையும், காலத்தையும் துண்டு துண்டுகளாக நொறுக்கி வைத்துள்ளது. இதுதான் இந்த நுாற்றாண்டின் மிகப்பெரிய பிரச்னை.
ஒட்டுமொத்தமாக எதையும் நினைவில் வைத்திருக்க முடிவதில்லை. 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கே, இப்போது கவனிப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது. ஞானத்தை தேடுபவர்களுக்கு மட்டுமின்றி, அன்றாட வாழ்க்கையை கடந்து செல்வதற்கும், தியானம் அவசியம்.
இவ்வாறு, ஜெயமோகன் பேசினார்.
ஆனந்த சைதன்யா மையத்தின் தில்லை செந்தில் பிரபு வரவேற்றார். எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.——-