பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான்கான் தலைமையின் கீழ், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான நட்புறவு மேம்படும் என்று நம்பிக்கை இருப்பதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக்கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். தனது தந்தையும் தேசிய மாநாட்டு கட்சி நிறுவனருமான ஷேக் முகம்மது அப்துல்லாவின் 36-வது நினைவு தினத்தில் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய பரூக் அப்துல்லா மேற்கூறிய தகவலை கூறினார்.
பரூக் அப்துல்லா மேலும் கூறும் போது, “ பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றுள்ள நிலையில், இந்தியா -பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்படும் என்று நம்பிக்கையோடு உள்ளோம். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்படுவது நமக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில், இருநாடுகளுக்கு இடையேயும் இணக்கான சூழல் இருந்தால்தான், நமது (காஷ்மீர்) பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பாதையை பின்பற்றி பிரதமர் மோடியும் அண்டை நாடுடான நட்புறவை மேம்படுத்துவார் என நம்புகிறேன். இருநாடுகளும் நட்புறவில் இருந்தால்தான், பிராந்தியம் வளர்ச்சி பெறும்.
மத்திய அரசு சட்டப்பிரிவு 35-ஏ, வை பாதுகாக்க தவறினால், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பது போல, சட்டப்பேரவை மற்றும் பாராளுமன்ற தேர்தலையும் தேசிய மாநாட்டு கட்சி புறக்கணிக்கும்” என்றார்.