இந்தி மொழியை திணிப்பதற்கு தமிழகத்தில் எப்போதுமே கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்தி தினத்தையொட்டி பாரதீய ஜனதா தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், சர்வதேச அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த நாடு முழுவதற்கும் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்தி மொழியால்தான் இந்தியாவை இணைக்க முடியும் என்றும் அதில் அவர் கூறி உள்ளார்.
அமித்ஷாவின் இந்த கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அவரது கருத்து நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் என்று கூறி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நமது அரசியலமைப்பு சட்டத்தின் தொடக்கத்திலேயே இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என தெளிவாக வரையறுக்கப்பட்டு உள்ளது. ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதே இந்தியாவின் பண்பாட்டு அடையாளம். பல்வேறு காரணங்களின் அடிப்படையிலான உள்நோக்கத்துடன், இந்த அடையாளத்தை சிதைத்து அழித்திடும் நடவடிக்கைகளை மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்த நாள்முதலே மேற்கொண்டு வருகிறது.
அதிகம் பேசப்படுவது இந்தி என்பதால் அதுதான் தேசிய மொழி என்றால், இந்தியாவில் அதிகம் பறக்கும் காக்கைதானே இந்தியாவின் தேசிய பறவையாக இருந்திருக்க வேண்டும் என அன்றே கேட்டவர் நம் தி.மு.க.வின் நிறுவனர் அண்ணா.
அரசமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் சமத்துவத்துடன் பேணப்படவேண்டிய நிலையில், அதில் ஒரு மொழியான இந்தி மட்டுமே இந்தியாவின் அடையாளம் என்ற வகையில், இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் வகையில், நாட்டின் உள்துறை மந்திரியே கருத்து வெளியிட்டு இருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல; கடும் கண்டனத்திற்குரியதுமாகும்.
அமித்ஷா தனது கருத்தை மறுபரிசீலனை செய்வது, இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் உகந்ததாக இருக்கும். எனவே அவர் தனது கருத்தை திரும்பப்பெறவேண்டும். பிரதமர் மோடியும் இதுகுறித்து தன்னுடைய நிலையை தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில், தி.மு.க. இன்னொரு மொழிப்போருக்கு ஆயத்தமாகும். நாட்டின் ஒருமைப்பாட்டை காக்க தி.மு.க. தயாராக இருக்கிறது. இது இந்தியா; ‘இந்தி’யா அல்ல என எச்சரிக்கிறது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-
அமித்ஷா ஆர்.எஸ்.எஸ். கொள்கையை பிரதிபலித்து இருக்கிறார். இந்தியா என்பது ஒரு நாடல்ல. பல மாநிலங்களின் கூட்டுதான் இந்தியா. இது கூட்டாட்சி தத்துவத்தில் நடைபெறுகிற ஒரு நாடு. 50 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற பிரச்சினை வந்தபோது, ‘இந்தி பேசாத மக்கள் விரும்புகிறவரை ஆங்கிலமே ஆட்சிமொழியாக இருக்கும், இந்தியை திணிக்க மாட்டோம்’ என்று நேரு சொன்னார். பிரதமர் என்ற முறையில் அவர் சொன்னதை இந்தியாவில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்.
தென் இந்தியாவில் உள்ளவர்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் எந்த மொழியையும் இன்னொருவர் மீது திணிக்கக்கூடாது. திணிப்பு என்று வந்தால் வெறுப்பு வந்துவிடும். அமித்ஷா கருத்து தேச ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும். எனவே, அவர் அதை திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமியும், அமித்ஷா தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும் என்றார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
இந்தியாவின் ஒற்றை மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் கருத்து தவறானது. இந்தி மொழி நாளில் இந்தியை உயர்த்திப்பேச அவருக்கு உரிமை உண்டு. ஆனால், பிற மொழி பேசும் மக்கள் மீது இந்தியை திணிக்கக்கூடாது. உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக இந்தி ஒருபோதும் திகழ முடியாது. இந்தியாவுக்கு இந்தியை அடையாளமாக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு உள்ளிட்ட பிற மொழி பேசும் மாநிலங்களின் அடையாளங்களை பறிக்க முயல்வது கண்டிக்கத்தக்க செயல்தானே? இந்தியாவில் அதிகம் பேரால் பேசப்படும் மொழி என்பதாலேயே இந்தி அனைத்து மக்களையும் ஒருமைப்படுத்திவிடாது. பிறமொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப்பட்டால் அது நாட்டை பிளவுபடுத்தி விடும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் ம.தி.மு.க. சார்பில் இன்று நடைபெறும் அண்ணாவின் 111-வது பிறந்தநாள் விழா மாநாடு ஏற்பாடுகளை நேற்று பார்வையிட்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியை திணிக்கிறார்கள். இந்தி படித்தால் தான் வேலை கிடைக்கும் என்றால், வட மாநில இளைஞர்கள் தமிழகத்திற்கு வந்து ஏன் வேலை செய்யவேண்டும்? இந்தி மொழி மட்டும் வேண்டும் என்றால், இந்தி வேண்டாம் என்கிற மாநிலங்கள் இந்தியாவுடன் இருக்காது. வட கிழக்கு, கர்நாடகா, தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு இருக்கிறது. ஆங்கிலம் மட்டுமே பொது மொழியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ஒரே நாடு, ஒரே மொழி என்ற முறையில் இந்தி மொழியை எல்லா மாநிலங்களும் கற்க வேண்டும், பேச வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். தொன்மையான தமிழ் மொழியை அழித்துவிடும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசும், சமஸ்கிருதவாதிகளும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மொழி பேசும் அனைவரும் ஒன்றுபட்டு மத்திய அரசின் மொழிவெறி கொள்கையை முறியடிக்க வேண்டும்” என்று கூறி உள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா கூறுகையில், “மத்தியில் உள்ள அரசுக்கு இந்தியாவின் பன்முகத்தன்மை ஜனநாயகத்திலும், கூட்டாட்சி நெறிகளிலும் நம்பிக்கை கிடையாது என்றும், அதனால்தான் உள்துறை மந்திரி இந்தி திணிப்பை பகிரங்கமாக பிரகடனப்படுத்தி இருக்கிறார்” என்றும் தெரிவித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறி இருப்பதாவது:-
ஒரே தேசம், ஒரே மொழி என்று அமித்ஷா கூறி இருப்பது ஏற்புடையதல்ல. காரணம் ஒரே தேசத்தில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தனிச்சிறப்பு உண்டு. குறிப்பாக இந்தி மொழியை கட்டாயப்படுத்துவது மக்களின் விருப்பமாக இருக்க முடியாது. மாறாக முதலில் தாய்மொழி, பிறகு பொதுவான இணைப்பு மொழியாக ஆங்கிலம் மற்றும் 3-வது மொழியாக இந்தி உள்ளிட்ட விருப்பமான எந்த மொழியையும் யார் வேண்டுமானாலும் விரும்பி படிக்கலாம் என்பதுதான் ஜனநாயகத்தில் மக்களின் விருப்பமாக இருக்க முடியும் என்பது த.மா.கா.வின் கருத்து. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறி இருப்பதாவது:-
இந்தியாவின் ஒரே மொழியாக இந்தியை அடையாளப்படுத்த வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்து ஏற்புடையதல்ல. வேற்றுமையில் ஒற்றுமையே உலக அரங்கில் இந்தியாவின் பெருமைமிக்க அடையாளம். இந்தியைவிட தொன்மையும், வளமும், ஆளுமையும் மிக்க தமிழ் உள்ளிட்ட மொழிகள் நிறைந்த தேசத்தில் தொடர்ந்து இந்தியை திணிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகள் மக்களிடம் வெறுப்பையே விதைக்கும். எனவே அமித்ஷா தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
“அமித்ஷாவின் கருத்து இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பன்முகத்தன்மை அங்கீகாரத்திற்கு முற்றிலும் எதிரானது. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், ஒற்றுமைக்கும் எதிரானவர்களை இதன் மூலம் நாடும், உலகும் நன்கு கண்டுகொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. மக்களின் மொழி உணர்வு என்ற நெருப்போடு விளையாடுவது புத்திசாலித்தனமல்ல” என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறி இருக்கிறார்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தி பேசுபவர்கள் இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவானவர்களே என்றும், இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் தீய நோக்கத்துடன் இந்தி மட்டுமே இந்தியாவை அடையாளப்படுத்தும் மொழி என அமித்ஷா பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று கூறி உள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோரும் அமித்ஷா கருத்துக்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.