இடிந்து விழும் நிலையில் மாதப்பூர் வி.ஏ.ஓ .,அலுவலகம் பொதுமக்கள் அச்சம்

0
5

சூலுார : வலுவிழந்த நிலையில் இருக்கும், மாதப்பூர் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு செல்ல, மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்டது கரவழி மாதப்பூர் கிராமம். இங்குள்ள கிராம நிர்வாக அலுவலக(வி.ஏ.ஓ.,) கட்டடம் கட்டி, 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனால், கட்டடத்தில் உள்ள சிமென்ட் பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து விழுகின்றன.

வெளியில் உள்ள ‘சன் ஷேடில்’ சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, துருப்பிடித்த கம்பிகள் வெளியில் தெரிகின்றன. அலுவலர்களுக்கு கழிப்பிட வசதியும் இல்லை. இரு ஆண்டுகளாக புதிய கட்டடம் கட்ட மக்கள் கோரிக்கை விடுத்தும் எந்த பயனும் இல்லை.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ”அலுவலக கட்டடம் வலுவிழந்து வருவதால், உள்ளே செல்லவே அச்சமாக உள்ளது. அலுவலர்களும் அச்சத்துடனே பணியாற்ற வேண்டி உள்ளது. நிதி ஒதுக்கினால் புதிய கட்டடம் கட்டப்படும், என கூறுகின்றனர். கடந்த முறை பழுதடைந்த அரசு கட்டடங்களை பட்டியலிடும் போது, மாதப்பூர் கிராம நிர்வாக அலுவலக கட்டடம் சேர்க்கப்படவில்லை. இந்தமுறையாவது, முன்னுரிமை கொடுத்து, புதிய கட்டடம் கட்டி கொடுக்க, மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும்,” என்றனர்.