வால்பாறை ; வால்பாறை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், இடப்பற்றாக்குறையால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறையில், 2022-23ம் கல்வியாண்டு முதல், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் செயல்படுகிறது. பிட்டர், எலக்ட்ரீசியன், பேஷன் டிசைன், டெக்ஸ்டைல்ஸ், மெக்கட்ரானிக்ஸ் ஆகிய படிப்பிற்காக, 104 மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்நிலையில், தொழிற்பயிற்சி நிலையம் துவங்கப்பட்டவுடன், கட்டட வசதி இல்லாததால், நகராட்சிக்கு சொந்தமான பயணியர் தங்கும் விடுதி, அரசு தொழிற்பயிற்சி நிலையமாக மாற்றப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்படுகிறது.
ஆனால், பயணியர் தங்கும் விடுதியில் மாணவர்கள் அமர்ந்து படிக்கவோ, தொழிற்பயிற்சி சம்பந்தமாக பயிற்சி செய்யவோ போதிய வசதி இல்லை. குறிப்பாக, அலுவலக அறை, மாணவர்களுக்கு பயிற்சி வழங்க தனி அறை, லேப் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை.
மாணவர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து படிக்கும் அளவுக்கு வசதியும் இல்லை. குறுகலான இடத்தில் தொழிற்பயிற்சி நிலையம் செயல்படுவதால் அரசு வழங்கியுள்ள, பெஞ்சு, டெஸ்க், பீரோ உள்ளிட்ட பொருட்கள் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ளன.
தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் (பொறுப்பு) குணசேகர் கூறியதாவது:
வால்பாறை மலைப்பகுதியில் படிக்கும் மாணவர்கள் வசதிக்காக, தொழிற்பயிற்சி நிலையம் துவங்கப்பட்டு, சிறப்பாக செயல்படுகிறது. ஆனால், நிரந்தர கட்டடம் இல்லாததால், மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
வால்பாறை நகரை விடுத்து, பிற இடங்களில் தொழிற்பயிற்சி நிலையம் கட்டினாலும், வன விலங்குகள் நடமாட்டத்தால் மாணவர்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு, வால்பாறை நகரில் உள்ள அரசு கல்லுாரி வளாகத்தில், 2.5 ஏக்கர் நிலப்பரப்பில், 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழிற்பயிற்சி நிலையம் விரைவில் கட்டப்படவுள்ளது.
இதற்கான இடத்தை உயர்அதிகாரிகள் ஏற்கனவே தேர்வு செய்துள்ள நிலையில், புதிய கட்டடம் கட்டும் பணி விரைவில் துவங்கப்படும்.