பகிர்மான குழு தலைவர் தேர்தல்
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை மூலம் பழைய, புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகள் பயன்பெறுகின்றன. இதில் புதிய ஆயக்கட்டில் 44 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில் புதிய ஆயக்கட்டு பாசன சங்கத்தில் தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டல குழு உறுப்பினர் பதவிகளுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதை தொடர்ந்து புதிய ஆயக்கட்டில் 16 பாசன சங்க தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
பாசன சங்க தலைவர்கள் மூலம் பொள்ளாச்சி கால்வாய் பகிர்மான குழு தலைவர்-1, பகிர்மான குழு தலைவர்-2, வேட்டைக்காரன்புதூர் கால்வாய் பகிர்மான குழு, சேத்துமடை கால்வாய், ஆழியாறு ஊட்டுக்கால்வாய் பகிர்மான குழு தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார். இதற்காக பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அதிகாரியாக சப்-கலெக்டர் பிரியங்கா செயல்பட்டார்.
வாக்குப்பதிவு
8.30 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இந்த நிலையில் பகிர்மான குழு 2-க்கு தர்மலிங்கமும், சேத்துமடை, ஆழியாறு ஊட்டுக்கால்வாய் பகிர்மான குழுவிற்கு சுந்தரசாமியும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்களை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். பகிர்மான குழு 1-க்கு செந்தில், கதிர்வேல் ஆகியோரும், வேட்டைக்காரன்புதூர் கால்வாய்க்கு விக்ரம் முத்து சபரி, சிவபாக்கியம் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதை தொடர்ந்து வாக்குசீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியங்கா முன்னிலையில் வாக்குபெட்டியின் சீல் உடைக்கப்பட்டு, வாக்குசீட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில் பகிர்மான குழு 1-க்கு செந்தில், வேட்டைக்காரன்புதூர் பகிர்மான குழுவிற்கு விக்ரம் முத்துசபரியும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். இதை தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி சான்றிதழ்களை வழங்கினார்.
போலீஸ் பாதுகாப்பு
பகிர்மான குழு உறுப்பினர் பதவிக்கு 12 பேரை தேர்வு செய்ய வேண்டும். இதில் 10 பேர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதை தொடர்ந்து 10 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பகிர்மான குழு தலைவர்கள் தேர்தலையொட்டி பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகம் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.