ஆழியாறு ஆற்றில் குடியிருப்பு பகுதியின் கழிவுநீர் கலக்காது! ரூ.13.50 கோடியில் சுத்திகரிப்பு நிலையம்

0
17

ஆனைமலை: ஆனைமலை அருகே, ஆழியாறு ஆற்றில் கழிவுநீர் கலக்கும் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, 13.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ஒதுக்கப்பட்ட நிதியை, முறையாக பயன்படுத்த வேண்டும்.

ஆழியாறு ஆற்று நீரை பயன்படுத்தி, ஆனைமலை ஒன்றியம், பொள்ளாச்சி நகராட்சி, வழியோர கிராமங்களை உள்ளடக்கிய குடிநீர் திட்டம், பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, கிணத்துக்கடவு உள்ளிட்ட, 64 கிராமங்கள், பெரிய நெகமம், கிணத்துக்கடவு பேரூராட்சி பயன்பெறும் வகையில், 13 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இத்திட்டத்தின் வாயிலாக, பொள்ளாச்சி நகரம், தெற்கு, வடக்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு, கோவை மாநகராட்சியின் குறிச்சி, குனியமுத்துார் உள்ளிட்ட பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

ஆனைமலை அருகே, ஆழியாறு ஆற்றில் ஒன்பது இடங்களில் நேரடியாக கழிவு நீர் கலந்து தண்ணீர் மாசுபட்டுள்ளது. நிரந்தர தீர்வு காண வேண்டுமென விவசாயிகள் குறைதீர் கூட்டம், அதிகாரிகள், அமைச்சரிடம் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டன.

கடந்தாண்டு மே மாதம் அமைச்சர் முத்துசாமி, ஆழியாறு ஆற்றில் ஆய்வு செய்து, ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என

தெரிவித்தார்.

இதையடுத்து, ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், ஒடையகுளம் பேரூராட்சிகள் சார்பில், நீர்வளத்துறை அதிகாரிகள் அனுமதியுடன், பொக்லைன் உதவியுடன் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்பட்டன.

தொடர் மழையால் தடுப்பணைக்கு நீர் வரத்து அதிகரித்த போது, மீதம் இருந்த ஆகாயத்தாமரை செடிகள் அடித்துச் செல்லப்பட்டன. ஆனால், கழிவுநீர் கலப்பது தடுக்கப்படவில்லை. இதனால், இயற்கை ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில், ஆற்றில் கழிவுநீர் கலக்கும் பிரச்னைக்கு தீர்வு காண, அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், திரவக்கழிவு மேலாண்மை திட்டத்தில், மத்திய அரசு, 6.3 கோடி ரூபாய், மாநில அரசு, 4.5 கோடி ரூபாய்; ஆனைமலை, ஒடையகுளம் பேரூராட்சிகள் தலா, 1.16 கோடி என மொத்தம், 13.65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒடையகுளம் பேரூராட்சி எல்லையில், இரண்டு ஏக்கர் நிலத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. ஆனைமலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், நான்கு கி.மீ., துாரமும், ஒடையகுளத்தில், 12 கி.மீ., என மொத்தம், 16 கி.மீ., துாரத்துக்கு குழாய் அமைக்கப்படுகிறது.

‘பம்பிங்’ செய்யப்பட்டு, 20 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சுத்திகரித்த நீர் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, மார்ச் மாதம், 25ம் தேதி டெண்டர் நடக்கிறது. இத்திட்டம் செயல்படுத்தினால், ஆற்றில் கழிவுநீர் கலக்காது.

இவ்வாறு, கூறினர்.

இதையும் கொஞ்சம் கவனியுங்க!

ஆனைமலை பேரூராட்சி அலுவலக வளாகத்தில், ஏற்கனவே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது, பாதியிலேயே கைவிடப்பட்டு காட்சிப்பொருளாக உள்ளது. அதுபோன்று இல்லாமல், சுத்திகரிப்பு நிலையம் அமைத்து முறையாக இயக்கவும், மின்கட்டண செலவுக்கு என்ன செய்வது என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும்.அரசு இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன், திட்டம் பாதியிலேயே கைவிடப்படாமல் முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து, துறை சார்ந்த வல்லுநர்களுடன் ஆலோசிக்க வேண்டும்.