ஆழியாறில் குவிந்த சுற்றுலா பயணிகள்

0
150

தீபாவளி பண்டிகை விடுமுறை காரணமாக ஆழியாறில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

தொடர் விடுமுறை

பொள்ளாச்சி அருகே ஆழியாறில் உள்ள கவியருவி (குரங்கருவி) வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். முக்கிய பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகளவில் இருக்கும். கடந்த சில வாரங்களாக பெய்த மழையால், அவ்வப்போது அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. வெள்ளப்பெருக்கின் அளவு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், விடுமுறை நாட்கள் மட்டுமின்றி பிற நாட்களிலும், உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியது. இந்தநிலையில், சனி, ஞாயிறு மற்றும் தீபாவளி, நேற்று விடுமுறை என தொடர்விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து கவியருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமானது.

ஆழியாறில் குவிந்தனர்

கவியருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள், குறைந்த அளவில் ரம்மியமாக கொட்டிய தண்ணீரில் வெகுநேரம் நின்று ஆனந்த குளியல் போட்டனர். கூட்டம் அதிகளவில் இருந்ததால் சுற்றுலா பயணிகள் வெகுநேரம் காத்திருந்து குளித்து சென்றனர். தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வந்ததால் சுற்றுலா பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர்.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால், நவமலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் விதிமீறி வனத்திற்குள் சென்று விடாமல் தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று ஆழியாறு அணை, பூங்காவில் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்தது. கூட்டத்தை போலீசார், வனத்துறையினர் கட்டுப்படுத்தினர்.