பொள்ளாச்சி : காணும் பொங்கலை கொண்டாட சுற்றுலாப்பயணியர், ஆழியாறு அணை, கவியருவியில் குவிந்தனர்.
பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில், பொழுதை கழிக்க சுற்றுலாப்பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்வது வழக்கம்.
அதே போன்று நேற்று காணும் பொங்கலை கொண்டாட சுற்றுலாப்பயணியர் குடும்பத்துடன், ஆழியாறு அணைப்பகுதியில் திரண்டனர்.
அணை மேற்பரப்புக்கு சென்று, அணை அழகை ரசித்த பயணியர், போட்டோ, செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
ஆழியாறு பூங்கா, அணையை பார்வையிட்ட சுற்றுலாப் பயணியர், கவியருவிக்கு படையெடுத்தனர். கவியருவியில் நீண்ட வரிசையில் நின்று, இயற்கையாக கொட்டும் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
திரும்பும் இடமெல்லாம் கூட்டம் அதிகமாக தென்பட்டதால் திருவிழாக்கோலம் பூண்டது. வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.