ஆற்றங்கரையில் கழிவுகள் அகற்றம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை

0
3

கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, அமராவதி ஆற்றில் குவிந்துள்ள கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது; நிரந்தர தீர்வாக குப்பைத்தொட்டிகள் வைக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மடத்துக்குளம் அருகே, அமராவதி ஆற்றின் கரையில், கொழுமம் சுற்றுப்பகுதியில், பழமையான கோவில்கள் அதிகளவு உள்ளன. அருகிலுள்ள குதிரையாற்று கரையிலும் கோவில்கள் அமைந்துள்ளன.

இந்நிலையில், கோவில்களை ஒட்டி அமராவதி ஆற்றில், பல்வேறு கழிவுகள் கொட்டுவது அதிகரித்தது. மேலும், குறிப்பிட்ட சில இடங்களில் துணிகளை வீசுவதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.

தற்போது பிரசித்தி பெற்ற கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா துவங்கியுள்ளது. திருவிழாவையொட்டி, பக்தர்கள் அமராவதி ஆற்றிலும், குதிரையாற்றிலும், தீர்த்தம் எடுத்தல்; பூவோடு எடுத்து வருவது வழக்கம்.

எனவே திருவிழாவையொட்டி, ஆற்றங்கரையில் துாய்மைப்படுத்தும் பணிகள் கொழுமம் ஊராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆற்றங்கரையில் நிலவும் இப்பிரச்னைக்கு, நிரந்தர தீர்வாக ஆங்காங்கே குப்பைத்தொட்டிகள் வைத்து கழிவுகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.