வால்பாறையில் ஆறுகளில் ஆபத்தான பகுதிகளில் குளிக்கக்கூடாது என்று சுற்றுலா பயணிகளுக்கு, போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
மழை குறைந்தது
மலைப்பிரதேசமான வால்பாறை மிகச்சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இதற்கிடையில் வால்பாறை பகுதியில் கடந்த 15 நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. தற்போது மழை குறைய தொடங்கியது. இதைத்தொடர்ந்து மீண்டும் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
அதாவது வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் இருந்து பெய்து வரும் நிலையில் கடந்த 9-ந் தேதி முதல் சுற்று வட்டார பகுதி முழுவதும் இரவு, பகலாக கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக வால்பாறை பகுதியில் கடுமையான குளிரும், பனிமூட்டமும் நிலவி வந்தது. இதனால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.
குளித்து மகிழந்தனர்
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக வால்பாறை பகுதியில் மழை குறைய தொடங்கியது. பகலில் கடுமையான வெயில் வாட்டி வருகிறது. இதனால் வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் வருகை மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.
அதன்படி இன்று வால்பாறை பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள் கூழாங்கல் ஆற்றிலும், கருமலை ஆற்றிலும் இறங்கி குளித்து மகிழ்ந்தனர். அவர்கள் ஆறுகளில் ஆழமான, ஆபத்தான இடங்களுக்கு சென்று குளித்து வருகின்றனர். இதனால் ஆறுகளில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் குளிக்கக்கூடாது என்று சுற்றுலா பயணிகளுக்கு, போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.