ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை

0
53

வால்பாறை தாலுகாவில் வால்பாறை, முடீஸ், சோலையாறு நகர் ஆகிய 3 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நகர்ப்புற மக்களும், கிராமப்புற மக்களும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

காலி பணியிடங்கள்

ஆனால் இந்த சுகாதார நிலையங்களில் 12 சுகாதார ஆய்வாளர்கள், 10 கிராம சுகாதார செவிலியர்கள், 4 மகப்பேறு உதவியாளர்கள், 8 செவிலியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. மேலும் கண் பரிசோதகர் பணியிடமும் காலியாக இருக்கிறது. இது தவிர ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்களே இல்லை. கிராம சுகாதார செவிலியர்களை கண்காணிக்கும் பகுதி சுகாதார செவிலியர்கள், டிரைவர் பணியிடமும் காலியாக உள்ளது.

குறிப்பாக வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்-சேய் நல்வாழ்வு மையம் உள்ளது. ஆனால் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க பெண் டாக்டர் இல்லை.

இது மட்டுமின்றி வால்பாறைக்கு தனியாக வட்டார மருத்துவ அலுவலர் இல்லாததால், அதை பெரியபோது ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். மேலும் முடீஸ் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சொந்த கட்டிடமே இல்லை

சேவையில் சிக்கல்

இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளால் சுகாதார நிலையங்களில் மருத்துவ சேவையை தொடர்ந்து வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

வால்பாறையை பொறுத்தவரை ஆரம்ப சுகாதார நிலையங்களையே பெரும்பாலான மக்கள் நம்பியுள்ளனர்.

தினமும் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது, தேவைப்படுவோருக்கு தடுப்பூசி போடுவது, கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்வது, மலைக்கிராமங்களுக்கு நேரில் சென்று சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவது, அரசு அறிவிக்கும் நோய் தடுப்பு பணிகளை உடனுக்குடன் மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

ஆனால் போதிய ஊழியர்கள் பணியில் இல்லாததால், அந்த பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. இதனால் நோயாளிகள் அவதி அடைந்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக இதே நிலை தொடர்வதால் மாநில சுகாதாரத்துறை, மாவட்ட கலெக்டர், மருத்துவ துணை இயக்குனர் ஆகியோர் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து வால்பாறை பகுதி மக்கள் கூறிய கருத்துகளை காண்போம்…!

டாக்டர் இல்லை

ரோனீஸ் தாமஸ்: மலைப்பிரதேசமான வால்பாறையில் மருத்துவ சேவைக்கு நகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதி மக்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களையே நாடி செல்லும் நிலை உள்ளது. மேலும் அங்குள்ள மருத்துவ பணியாளர்களும் வீடு தேடி வந்து மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்குகிறார்கள். ஆனால் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லை. இதுமட்டுமின்றி பல்வேறு பிரிவு பணியாளர்கள் பற்றாக்குறையும் நிலவுகிறது. இதனால் மருத்துவ சேவை பாதிக்கப்படுகிறது. மேலும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கோ அல்லது கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கோ அலைந்து திரியும் நிலை உள்ளது.

கண் சிகிச்சை

டிரைவர் கண்ணன்: வால்பாறையில் உள்ள 3 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் சேர்த்து, ஒரேயொரு கண் டாக்டர் மட்டுமே பணியாற்றி வந்தார். அவரும், வேறு ஊருக்கு மாறுதலாகி சென்றுவிட்டார். அதன்பிறகு இதுவரை அந்த பணியிடம் நிரப்பப்படவில்லை.

இதனால் கண் பரிசோதனை உள்ளிட்ட சேவைகளை பெற நீண்ட தொலைவில் உள்ள கோவைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் முதியவர்கள் கடும் அவதிப்பட நேரிடுகிறது. இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்.

உடனடியாக…

ஹக்கீம்: வால்பாறை பகுதியில் அவ்வப்போது புதுவித காய்ச்சல் பரவி வருகிறது. அந்த சமயத்தில் ரத்த பரிசோதனை செய்ய கூறுகின்றனர். ஆனால் இங்குள்ள 3 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்களே இல்லை. இதனால் தனியார் ஆய்வகத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அங்கு அதிக கட்டணம் கேட்கிறார்கள். அதிக பணம் கொடுத்து மருத்துவம் பார்க்க முடியாத காரணத்தால்தான், ஆரம்ப சுகாதார நிலையங்களை நாடி செல்கிறோம். ஆனால் அங்குள்ள மருத்துவ பணியாளர்களும், தனியாரிடம் செல்ல கூறுவதால், என்ன செய்வது என தெரியவில்லை. கர்ப்பிணிகளுக்கு கூட இதே நிலைதான் நீடிக்கிறது. எனவே சுகாதார நிலையங்களில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

தொற்று நோய்கள்

சிவக்குமார்: சுகாதார நிலையங்களில் ஆய்வாளர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக கிடக்கிறது. இதனால் நகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதியில் குடிநீர் தொட்டிகள் முறையாக ஆய்வு செய்யப்படுவது இல்லை. பள்ளிகளில் சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுகிறதா, கழிப்பிடங்கள் பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

இது தவிர தொற்று நோய்களை தடுக்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபடவும் சுகாதார ஆய்வாளர்கள் இல்லை. இந்த நிலையை போக்க உடனடியாக சுகாதார ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும்.