கோவை; முதலீட்டு பணத்திற்கு அதிக லாபம் தருவதாக கூறி, முதியவரிடம் ரூ.18 லட்சம் மோசடி செய்த நபரை குறித்து, மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்
கோவை, கோவில்பாளையத்தை சேர்ந்த, 62 வயது முதியவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரின் மொபைல் எண்ணிற்கு வந்த, ஒரு குறுஞ்செய்தியில் ஆன்லைனில் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, முதியவர் அந்த எண்ணுக்கு அழைத்து பேசினார். அப்போது பேசிய நபர், தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் எனவும், லாபம் மற்றும் முதலீட்டு பணத்தை உடனடியாக கொடுத்து விடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
அந்த நபர் கூறிய செயலியை, முதியவர் மொபைலில் பதிவிறக்கம் செய்தார். அந்த செயலி மூலம் முதலில் ரூ.1,000 முதலீடு செய்தார். அதற்கு ரூ.1,250 அவரின் கணக்கிற்கு வந்தது. அதை முதியவர் வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொண்டார்.
அடுத்த முறை ரூ. 50 ஆயிரம் முதலீடு செய்தார். அதற்கு, லாபத்துடன் ரூ.62 ஆயிரத்து 500 ரூபாய் முதியவரின் கணக்கிற்கு வந்தது. இதனால் நம்பிக்கை பெற்ற முதியவர், ரூ.18.5 லட்சத்தை அந்த செயலியில் முதலீடு செய்தார்.
அது, ரூ.22.5 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் முதியவருக்கு பணம் தேவைப்பட்டதால் அதை எடுக்க முயன்றார். ஆனால் எடுக்க முடியவில்லை. இதனால், அவர், தன்னிடம் பேசிய நிறுவன ஊழியரிடம் தொடர்பு கொண்டு பேசினார்.
அதற்கு அந்த நபர், அதிக தொகை என்பதால் நாங்கள் அனுமதி கொடுத்தால் தான் வங்கி கணக்குக்கு பணத்தை மாற்ற முடியும். நீங்கள் இப்போதுதானே சொல்லி இருக்கிறீர்கள், நாங்கள் அனுமதி கொடுத்துவிடுவோம், செல்போன் செயலியில் இருக்கும் பணத்தை, வங்கி கணக்குக்கு மாற்றிக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு, இணைப்பை துண்டித்துவிட்டார்.
ஆனால், பணத்தை வங்கி கணக்குக்கு மாற்ற முடியவில்லை. மீண்டும் நிறுவன ஊழியரை தொடர்பு கொண்ட போது, மொபைல் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது
முதியவர் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.