ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இங்கு பொள்ளாச்சி, ஆனைமலை, சுல்தான்பேட்டை, உடுமலை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொப்பரை தேங்காய்களை ஏலத்திற்காக கொண்டு வருகின்றனர்.
கொப்பரை தேங்காய்களை கேரள மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியபாரிகள் ஏலம் எடுத்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு 483 மூட்டை கொப்பரை தேங்காய்களை 76 விவசாயிகள் கொண்டு வந்தனர். அதனைத்தொடர்ந்து கொப்பரை தேங்காய் தரம் பிரிக்கும் பணி நடைபெற்றது.
விலை அதிகரிப்பு
இதில் 245 மூட்டை கொப்பரை முதல் ரகமாகவும், 238 மூட்டை கொப்பரை 2-வது ரகமாகவும் பிரிக்கப்பட்டது. தொடர்ந்து ஏலம் நடைபெற்றது. இதில் தாராபுரம், காங்கேயம், கேரள மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.
ஏலத்தில் முதல் ரகம் கிலோ ஒன்றிற்கு 78 ரூபாய் 50 காசுகள் முதல் 83 ரூபாய் 10 காசுகள் வரையும், 2-வது ரகம் கிலோ ஒன்றிற்கு 55 ரூபாய் 60 காசுகள் முதல் 74 ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த வாரத்தை விட 37 மூட்டைகள் வரத்து குறைதிருந்தது. மேலும் கடந்த வாரத்தை விட கொப்பரை தேங்காய் ஒரு கிலோவிற்கு 75 காசுகள் விலை அதிகரிதுள்ளது. மேலும் தேங்காய் சீசன் தொடக்கம் என்பதாலும், தேங்காய் விலை சற்று உயர்ந்துள்ளது. இந்த தகவலை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தெரிவித்தார்.