கோவையில் ஆடிவெள்ளியையொட்டி கோவையில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு பூஜை
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்தது என்று கூறுவது உண்டு. இந்த மாதத்தில் விரதம் இருந்து வேண்டும் பக்தர்களுக்கு வேண்டி கேட்பது கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே இந்த மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அத்துடன் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பது உண்டு.
அதன்படி வெள்ளிக்கிழமை என்பதால் கோவையில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. குறிப்பாக கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதற்காக அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டன. இதையடுத்து பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
பழங்களால் அலங்காரம்
அதுபோன்று கோவை உப்பிலிபாளையம் சிக்னல் அருகே உள்ள தண்டுமாரியம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது. இந்த கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். மேலும் கோவை பெரியக்கடை வீதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு 2½ டன் எடை கொண்ட பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அத்துடன் கோவை ராஜசெட்டியார் வீதியில் உள்ள வனபத்ரகாளியம்மனுக்கு எலுமிச்சையால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் இந்த கோவில்களுக்கும் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். மேலும் கோவை புலியகுளத்தில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில், முக்தி அம்மன் கோவில், காட்டூர் மணிமுத்து மாரியம்மன் கோவில், ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவில் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
சீரநாயக்கன்பாளையம்
இதுபோல் சீரநாயக்கன் பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை 6 மணிக்கு மூலவர் மாரியம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. பகல் 12 மணிக்கு மாரியம்மனுக்கு உச்சிகால பூஜை நடந்தது.பக்தர்கள் கொடுத்த வளையல்கள் மூலம் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வளையல் அலங்காரத்தில் மாரியம்மன் காட்சி அளித்தார்.தொடர்ந்து பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.