ஆடம்பர வட்டத்தில் இருந்து வெளியேறுங்கள்! மாணவர்களுக்கு ‘இஸ்ரோ’ விஞ்ஞானி அறிவுரை

0
58

கோவை; ”ஆடம்பர வட்டத்தில் இருந்து வெளியேறி வாய்ப்புகளை பயன்படுத்தி மாணவர்கள் முன்னேற்ற பாதையை அடைய வேண்டும்,” என, ‘இஸ்ரோ’ விஞ்ஞானி பிரபு பேசினார்.

கோவை அரசு கலைக் கல்லுாரி மாணவர்களிடம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’வின் இரு செயற்கைகோள்கள் இணைப்பு திட்டத்தில் இடம்பெற்ற (பிளைட் டைனமிக்ஸ்) துணை திட்ட இயக்குனர் பிரபு நேற்று கலந்துரையாடினார்.

அப்போது, அவர் பேசியதாவது:

ஆடம்பர வட்டத்தில் இருந்து மாணவர்கள் வெளியேற வேண்டும். முதலில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி முன்னேற்ற பாதையை அடைய வேண்டும். அந்த வேலையில் திருப்தி இல்லையெனில் வேறு வாய்ப்பை தேடலாம்; பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் கூடாது.

பெற்றோர் படும் கஷ்டத்தை உணர்ந்து செயல்பட்டாலே வாழ்வில், 80 சதவீதம் வெற்றிபெற்று விடலாம். அதை உணராதவர்கள்தான் வழிமாறி செல்கின்றனர்.

பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் ஆகிய மூவரும் ஏணிப்படியாக இருந்து நமக்கு வழிகாட்டுகின்றனர்.

எனவே, எதையும் துணிந்து முடிவு எடுக்க வேண்டும். விண்வெளி ஆராய்ச்சியில் தோல்வி என்பது கிடையாது. அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த நிலைக்கு செல்கிறோம். இலக்கை நிர்ணயித்து கால மேலாண்மையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

இவ்வாறு, அவர் பேசினார்.

கல்லுாரி முதல்வர் எழிலி, அரசியல் அறிவியல் துறை தலைவர் கனகராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வளர்ந்து விட்டோம்!

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,”இந்தியா சொந்தமாகவே விண்வெளி ஆராய்ச்சி மையத்தை(பாரதிய அனட்ரிக்ஷ் மையம்) வரும், 2030 முதல், 2035ம் ஆண்டுக்குள் அமைக்க திட்டமிட்டுள்ளது. விண்வெளி துறையில் நாம் ஏற்கனவே வளர்ந்துவிட்டோம். ககன்யான், சந்திரயான் போன்ற திட்டங்களை போல் தேவைக்கேற்ப மேலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. இஸ்ரோ, டி.ஆர்.டி.ஓ., எனும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், எச்.ஏ.எல்., எனும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் உள்ளன. இவற்றில் பணிபுரிய கல்வித் தகுதி உள்ளிட்டவற்றை மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்,” என்றார்.