பள்ளி, கல்லூரி காலத்தை வீணாக்காமல், ஆசிரியர்களின் வழிகாட்டுதலை ஏற்று மாணவ- மாணவிகள் வளர வேண்டும் என்று கோவை சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி அறிவுரை வழங்கினார்.
பேச்சுப்போட்டி
கல்லூரி அளவிலான பன்மொழி பேச்சுப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. இதற்கு கல்லூரி செயலர் மற்றும் இயக்குனர் வாசுகி தலைமை தாங்கினார். ரூட்ஸ் நிறுவனங்கள் மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் கவிதாசன் பேசினார்.
விழாவில் கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துச்சாமி கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். அப்போது அவர் கூறியதாவது:-
அப்துல்கலாம்
அப்துல்கலாம் எளிமையான குடும்பத்தில் பிறந்து, ஜனாதிபதி என்ற உயர்ந்த நிலையை அடைந்தவர். இதற்கு அவரிடம் இருந்த கடின உழைப்பும், திருக்குறள் வழி நின்ற வாழ்க்கையும்தான் முதல் காரணம்.
அனைத்து மதங்களும் ஒன்றிணைந்தால் நாட்டில் அமைதியை ஏற்படுத்த முடியும் என்று அவர் நம்பினார். ஆன்மிகத்தோடு அறிவியலும் கலந்தால் சமூக மேம்பாடு நிச்சயம் கிடைக்கும் என்று அவர் நினைத்தார். அதையும் முயற்சி செய்து வெற்றி பெற்றார்.
கனவு கண்டார்
பாரதியார் தனது கவிதையில் சொல்வதைபோல, அப்துல்கலாம் வேடிக்கை மனிதராக வாழவில்லை. ஒவ்வொரு நாளும், இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்று கனவு கண்டார். ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பேசும் போது கூட கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற சங்ககால பாடலை மேற்கோள் காட்டி பேசியது உலக மக்கள் அனைவரும் ஒன்று என்ற அவரின் ஆழமான நம்பிக்கையை பிரதிபலித்தது.
பணிவுடன் இருத்தல், தொடர்ந்து தன்னை தயார்படுத்திக் கொள் தல், தைரியமாக எதையும் சந்தித்தல், லட்சிய கனவு காணுதல், ஒழுக் கமான கல்வியை பெறுதல் ஆகிய 5 நற்பண்புகளையும் அப்துல்கலா மின் வாழ்க்கையில் இருந்து இன்றைய மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்
ஒழுக்கமாக வளர வேண்டும்
பள்ளி, கல்லூரி காலங்களில் தங்கள் வாழ்க்கையை வீணாக்காமல், பெற்றோரை மதித்து, ஆசிரியர்களின் வழிகாட்டுதலை ஏற்று ஒழுக்கம் உள்ளவர்களாக மாணவர்களாக வளர வேண்டும். கல்லூரி காலங்க ளில் நூலகங்களை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். ஏழ்மை நிலையில் இருக்கும் ஒரு மனிதனை கல்வியால் மட்டுமே உயர்ந்த நிலைக்கு அழைத்துச்செல்ல முடியும் என்பதை அப்துல்கலாமிடம் இருந்து ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டும். ஒழுக்கமான கல்வி தான் இப்போது நாட்டுக்கு தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.