அ.தி.மு.க.வினர் சாலை மறியல்

0
86

எடப்பாடி பழனிசாமி கைதை கண்டித்து கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

எடப்பாடி பழனிசாமி கைது

தமிழக சட்டமன்ற கூட்ட தொடரில் இருக்கை விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைடுத்து பேரவை தலைவர் அப்பாவு, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க தடை விதித்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் அனுமதி கோரியிருந்தனர். ஆனால் போலீசார் இதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து காவல்துறை தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி உள்பட அ.தி.மு.க. எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

கோவை ஒசூர் ரோட்டில் உள்ள அ.தி.மு.க. மாவட்ட தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகை முன்பு ஏராளமான அ.தி.மு.க.வினர் குவிந்தனர். அவர்கள் திடீரென கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று அவினாசி ரோடு அண்ணா சிலை சிக்னல் அருகே நடுரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு மாநகர் பொருளாளர் பார்த்திபன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க.வினர் போராட்டம் காரணமாக அவினாசி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் 150-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கைது செய்யப்பட்ட அ.தி.மு.க.வினர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்ட னர்.

துடியலூர்

துடியலூர் பஸ் நிலையம் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி செயலாளர் வனிதாமணி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கவிச்சந்திரமோகன், பிரகாஷ், ஜெயராஜ், மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி பிரிவில் நடந்த ஆர்பாட்டத்திற்கு நகர செயலாளர் ரகுநாதன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. நிர்வாகிகள் சசிகுமார் குருந்தாசலம், ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.