கோவை; அவினாசிலிங்கம் பல்கலையில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில், கிறிஸ்து பிறப்பு காட்சியை மாணவியர் தத்ரூபமாக நடித்து கவர்ந்தனர்.
அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையில், கிறிஸ்துமஸ் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதில், கிறிஸ்துவின் பிறப்புக்காட்சியை காட்டும், ‘கிறிஸ்துமஸ் குடில்’ அமைத்து, அன்னை மரியா உள்ளிட்ட வேடங்களில், தத்ரூபமாக மாணவியர் நடித்தது, பார்வையாளர்களை கவர்ந்தது.
பல்கலையின், 40 துறைகளில் தலா இருவர் என, 80 மாணவியர் மரியா, சூசை, தேவதைகள், துாதர்கள் என, கிறிஸ்து பிறப்பு உயிர் காட்சியில் இடம்பெற்றனர்.
குழந்தை இயேசு பிறப்பு நிகழ்ச்சியினை, இசையோடு கலந்த நாடகத்தில் ஏழு காட்சிகள் இடம்பெற்றன. கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து, பரிசுகள் வழங்கி குதுாகலமாக கொண்டாடினர்.
சிறப்பு விருந்தினராக, நிர்மலா கல்லுாரி முன்னாள் துணை முதல்வர் அருள் சீலி பங்கேற்று பேசினார். பல்கலை துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர், பதிவாளர் இந்து உட்பட பலர் பங்கேற்றனர்.