அவிநாசி ரோடு மேம்பால பணிக்கு சிக்கல்; மின் கம்பியை புதை வடமாக மாற்றுவதால் தாமதம்

0
7

கோவை : கோவை – அவிநாசி ரோட்டில் கட்டப்படும் மேம்பாலத்துக்கு இடையூறாக உள்ள உயரழுத்த மின் கம்பிகளை, புதைவடமாக கொண்டு செல்லும் பணி நடந்து வருகிறது. இதேபோல், மின் கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்களை தள்ளி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

கோவை – அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. கோல்டுவின்ஸ் பகுதியில், ‘ரேம்ப்’ அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது.

உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரையிலான, 10.1 கி.மீ., துாரத்துக்கான ஓடுதளப் பாதையை மார்ச் மாதத்துக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது; இன்னும் ஏராளமான பணிகள் நிலுவையில் இருப்பதால், கட்டுமான நிறுவனத்துக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் கூறியதாவது:

மேம்பாலப் பணியை மார்ச்சுக்குள் முடிக்க திட்டம் வகுத்துள்ளோம்; சில மாதங்கள் தாமதமாகும்; கால அவகாசம் நீட்டிக்கப்படும். கிரேன் நிறுத்துவதற்கு வசதியில்லாததால், ‘ரேம்ப்’ கட்டும் பணி தாமதமாகி வருகிறது.

நவ இந்தியா பகுதியில், உயர் மின்னழுத்த கம்பி செல்கிறது; பாப்பநாயக்கன்பாளையத்தில் இருந்து நவஇந்தியா துணை மின் நிலையம் வரை, 1.5 கி.மீ., துாரத்துக்கு புதை மின் வடமாக கொண்டு செல்கிறோம்.

ஏராளமான இடங்களில், ‘டிரான்ஸ்பார்மர்’கள் மற்றும் மின் கம்பங்களை மாற்ற வேண்டியுள்ளது. மின்வாரியத்துக்கு தொகை செலுத்தி விட்டோம்; வேலை செய்யும் இடங்களுக்கு ஏற்ப, மாற்றியமைத்து வருகிறோம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இன்னும் ஒரு மாதமாகும்

நெடுஞ்சாலைத்துறையினர் மேலும் கூறுகையில், ‘கோல்டுவின்ஸ் முதல் நீலாம்பூர் வரை, 5 கி.மீ., மேம்பாலத்தை நீட்டிப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது; இன்னும் ஒரு மாதமாகும். இதே வழித்தடத்தில் ‘மெட்ரோ ரயில்’ இயக்க இருப்பதால், இரு திட்ட அறிக்கையும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். முதல், 3 கி.மீ., துாரத்துக்கு ஒரே துாணின் கீழே வாகன போக்குவரத்து, இரண்டாவது அடுக்கில் ‘மெட்ரோ ரயில்’ இயக்கும் வகையில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. அதற்கேற்ப திட்ட மதிப்பீடு தொகை கணக்கிடப்படும்’ என்றனர்.