பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை அருகே, வேட்டைக்காரன்புதுார் அழுக்குச்சாமியார் கோவிலில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தரிசனம் செய்தார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை அருகே, வேட்டைக்காரன்புதுார் அழுக்குச்சாமியார் கோவிலுக்கு, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று காலை வந்தார். கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து, சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் த.மா.கா., பொள்ளாச்சி நகர தலைவர் சுப்பராயன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
அதன்பின்னர், திருமண மண்டபத்தில் நடந்த நுால் வெளியிட்டு விழாவில் பங்கேற்றார். அதில், ஆனைமலை வி.ஆர்.டி., பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜெயக்குமார் எழுதிய மூன்று புத்தகங்களை வெளியிட்டார். கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். புதுச்சேரி முதல்வர், நுால்களை வெளியிட, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.
புதுச்சேரி முதல்வர் பேசுகையில், ”எழுத்தாளர்கள் எத்தகைய கருத்துக்களை வேண்டுமானாலும் எழுதலாம்; வெளிப்படுத்தலாம். மற்றவர்களை பாதிக்காதவாறு எழுத வேண்டும். நம்முடைய எண்ணம், செயல்பாடு எதிர்கால சந்ததியினருக்கு பயன் உள்ளதாக இருக்க வேண்டும்,” என்றார்.
அதன்பின், முதல்வர் ரங்கசாமியிடம், தேசிய கல்விக்கொள்கை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, ‘கோவிலுக்கு வந்து இருக்கேன்; அது பற்றி பேச முடியாது,’ எனக்கூறிச் சென்றார்.