அன்னுார் : அறநிலையத்துறை நிலத்தில் கழிவுநீர் குளம் ஏற்பட்டதால் பக்தர்கள் வேதனைப்படுகின்றனர்.
அன்னுாரில், சத்தி சாலையில் இருந்து, நாகமாபுதுார் செல்லும் இட்டேரி சாலையில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஒன்பது ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் பராமரிப்பில்லாததால் சத்தி ரோடு, அவிநாசி ரோடு, தர்மர் கோவில் வீதி பகுதியில் இருந்து, தினமும் பல ஆயிரம் லிட்டர் கழிவுநீர் இங்கு தேங்குகிறது.
இதனால் குளம் போல் தேங்கி அங்கிருந்து வழிந்து வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள்ளும் புகுந்து விடுகிறது.
இது குறித்த அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘இங்கு 25 ஏக்கர் விவசாய நிலம் கழிவு நீரால் பாதிக்கப்பட்டுள்ளது. கழிவு நீர் புகுந்து விடுவதால் வாழை, சோளம் என பயிர்கள் அழுகி வருகின்றன.
இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்து விட்டோம். சென்னை உயர்நீதிமன்றத்தில் கழிவுநீரை விவசாய பூமியில் விடக்கூடாது என வழக்கும் தொடர்ந்து உள்ளோம். ஆனாலும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இப்பகுதியில் துர்நாற்றமும், கடும் சுகாதார கேடும் ஏற்பட்டுள்ளது.
கழிவுநீர் விவசாய தோட்டத்திற்குள்ளும், அறநிலையத்துறை நிலத்திற்குள்ளும் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.