அரிசி விலை குறைய அதிக வாய்ப்பு! வியாபாரிகள் தகவல்!

0
17

கோவை; மாநிலம் முழுவதும் அரிசி விலை, கடந்த மூன்று மாதங்களாக ஏற்றத்தில் இருந்தது. அறுவடை காரணமாக தற்போது புதிய வரத்துக்கள் வரும் சூழலில், விலை குறைய வாய்ப்புள்ளதாக, கோவை மாவட்ட அரிசி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரிசிதான் நமது முக்கிய உணவு. இதன் விலை, உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்களால் ஏறுவதும், இறங்குவதும் உண்டு. கடந்த சில மாதங்களாகவே இதன் விலை உயர்ந்துதான் காணப்படுகிறது.

கோவை சந்தைகளில் புழுங்கல் அரிசி 26 கிலோ மூட்டை கடந்த அக்., மாதம், 1800 ரூபாய்க்கு இருந்தது. டிசம்பரில் 1900 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது.

பி.பி.டி., (பழையது) 26 கிலோ 1,470க்கு இருந்தது, தற்போது 1,520 ரூபாய்க்கும், ஆர்.என்.ஆர்., (பழையது) 26 கிலோ 1600க்கு இருந்தது தற்போது 1,650 ரூபாய்க்கும், எம்.45 ரக அரிசி 1,080 ரூபாயிலிருந்து 1,150 ரூபாய்க்கும், பச்சரி 26 கிலோ 890 ரூபாயிலிருந்து 980 ரூபாய்க்கும் உயர்ந்துள்ளது.

பிரியாணி அரிசி ஒரு கிலோ 73-95 ரூபாயிலிருந்து 80-102 ரூபாய் வரைக்கும், 26 கிலோஇட்லி அரிசி மூட்டை 970 ரூபாய் இருந்தது, தற்போது 1080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.அரிசி விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

இந்நிலையில், புதிய அரிசி வரத்துக்கள் இருக்கும் என்பதால், இருப்பில் உள்ள அரிசி ரகங்களை விற்பதில், வியாபாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர். இதனால், இப்போதைக்கு விலை ஏறுவதற்கு இனி வாய்ப்பு இல்லை என, வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, கோவை மாவட்ட அரிசி வியாபாரிகள் சங்க செயலாளர் சரவணக்குமார் கூறியதாவது:

கடந்த மூன்று மாதங்களில், அரிசி விலை அபரிமிதமாக அதிகரித்து இருக்கிறது. இட்லி அரிசி மட்டுமே தீபாவளி சமயத்தில், 26 கிலோ பேக், 950-970 ரூபாய் ஆக இருந்தது; தற்போது, 1050-1070 ரூபாயாக உள்ளது.

இதற்கு காரணம், சாதாரணமாக காஞ்சிபுரத்தில் இருந்து இட்லி அரிசி டிச., மாதம் வரத்துவங்கிவிடும். ஆனால், மழை காரணமாக இந்த முறை இதுவரை, வரத்து துவங்கவில்லை. எவ்வளவு பாதிப்பு எனவும் தெரியவில்லை. இதனால், இட்லி அரிசி விலை மேலும்குறையவும், அதிகரிக்கவும் வாய்ப்புகள் இல்லை.

தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் மழை பெய்துள்ளது. இதனால் இங்கு பாதிப்பு இருந்தாலும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து, வரத்து சற்று அதிகமாக இருக்கும் என்பதால், சமாளித்துவிட முடியும்.

இதனால், விலையில் பெரிய ஏற்றம் இருக்க வாய்ப்பில்லை. புதிய வரத்து அரிசி கடந்தாண்டை விட, கிலோவுக்கு ரூ.2 அல்லது 3 குறைந்துதான் வந்துள்ளது.

ஏற்றுமதி அனுமதி வழங்கியதால், பச்சரிசி விலை அதிகரித்ததுடன்; சந்தையிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பிரியாணி அரிசியை பொருத்தவரையில், விலை உயர்ந்தே காணப்படுகிறது. 72-93 ரூபாய் வரை இருந்தது, தற்போது 80- 100 ரூபாயாக உள்ளது.

சாப்பாட்டு அரிசி விலை குறைய வாய்ப்புள்ளது. மொத்தமாக வாங்கி, இருப்பு வைக்கும் வழக்கம் உள்ளவர்கள் பொங்கல் முடிந்த பின், ஜன., மாத இறுதியில் வாங்கிக்கொள்ளலாம். அச்சமயம் விலை குறைந்து இருக்கும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்