கோவை:தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில், கோவை அருகே சூலுாரில் புதிய தாழ்தள பஸ்கள் துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. அமைச்சர்கள் சிவசங்கர் மற்றும் செந்தில்பாலாஜி பங்கேற்றனர்.
இவ்விழா மேடையில் அமைச்சருக்கு அருகில் உள்ள இருக்கைகளில், தி.மு.க., மாவட்ட செயலர்கள் முருகேசன், ரவி அமர்ந்திருந்தனர். தி.மு.க., நிர்வாகிகள் பலரும், மேடை முழுதும் பரவலாக நின்றிருந்தனர்.
கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் மட்டும் அமர இருக்கை வழங்கப்பட்டது. மற்ற அதிகாரிகளுக்கு இருக்கை கிடைக்கவில்லை.
இதேபோல், மத்திய சிறை வளாகத்துக்குள் சிறைவாசிகளுக்கு, வீடியோ அழைப்பில் பேசும் வசதியை துவக்கி வைக்க, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வந்திருந்தார். அந்நிகழ்ச்சி மேடையிலும் தி.மு.க., நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கும் அமைச்சர்களும், கட்சியினரிடம் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருப்பதால், அதிகாரிகளும் ஒதுங்கி விடுகின்றனர். இது, அரசு அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.