கோவை; அனைத்து அரசு வாகனங்களிலும், ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டு, வாகனத்தின் இருப்பிடம், இயக்கப்படும் வழித்தடம் உள்ளிட்டவற்றை கண்காணிக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது
மோட்டார் வாகன சட்டங்களும், விதிமுறைகளும் அவ்வப்போது மாற்றப்பட்டு வருகின்றன. சில விதிமுறைகள் புதியதாக புகுத்தப்பட்டும் வருகின்றன. அந்த வகையில், தற்போது மோட்டார் வாகன விதிமுறைகளில், புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, அரசு பயன்பாட்டிலுள்ள வாகனங்களுக்கு, ஜி.பி.எஸ்.,கருவியை பொருத்த வேண்டும் என்று, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதை விரைவாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றும், அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இக்கருவியை, அரசு வாகனங்களில் பொருத்துவதால், வாகனங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் எளிதாக வந்துவிடும்.
விபத்து, நெரிசல் உள்ளிட்ட தகவல்களை, எளிதாக தெரிந்து கொள்ளலாம். அதோடு நகரை விட்டு வெளியே நெடுந்துாரம் செல்லும் போதும், வாகனத்தின் இருப்பிடம் மற்றும் அதிகாரிக்கான பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும், எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.
இது குறித்து, கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) விஸ்வநாதன் கூறியதாவது:
‘வெகிக்கிள் லொக்கேட்டிங் டாக்கிங் டிவைஸ்’ (வி.எல்.டி.டி) தமிழக அரசு உத்தரவுப்படி, அரசு வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளது.இது, வாகனம் எங்கே உள்ளது என்பதை, ஒலி வடிவத்தில் எளிதாக தெரிவிக்கும் வசதியை கொண்டது.
இடத்தோடு சர்வருடன் இணைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து, எவ்வளவு கி.மீ., தொலைவிலுள்ளது என்பது குறித்த விபரங்களை, தெளிவாக தெரிவிக்கும் வசதி கொண்டது.
இந்த டிவைஸ், அரசு வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கான சர்வர் பொருத்தப்பட்டு வருகிறது. விரைவில், அனைத்து இடங்களிலும் பொருத்தப்படும். இதன் வாயிலாக அனைத்து தகவல்களையும், ஒரே இடத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, விஸ்வநாதன் கூறினார்.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது, மாநில அரசின் கடமை. அதனால் ஜி.பி.எஸ்.,கருவிக்கு பதிலாக, அதைவிட முன்னோடியான கருவியை, தமிழக அரசு வெகிக்கிள் லொக்கேட்டிங் டாக்கிங் டிவைஸ் (வி.எல்.டி.டி) பொருத்த உத்தரவிட்டுள்ளது.
அரசு வாகனங்களில், இக்கருவி பொருத்தப்பட்டுள்ளதை, உறுதி செய்யும் வகையில், அந்தந்த ஆர்.டி.ஓ.,க்களிடம் சான்று பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.