அரசு மருத்துவமனை முன் தொடருது போக்குவரத்து நெருக்கடி : வாகனம் நிறுத்த கட்டணம் நிர்ணயித்தது மாநகராட்சி

0
11

கோவை; கோவை அரசு மருத்துவமனை முன் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க, வாலாங்குளத்தின் கரையில் மாநகராட்சி சார்பில் ‘வாகனம் நிறுத்துமிடம்’ ஏற்படுத்தப்பட்டது. இரு சக்கர வாகனங்களுக்கு இரண்டு மணி நேரத்துக்கு, 10 ரூபாய், நான்கு சக்கர வாகனங்களுக்கு, 30 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் உறவினர்கள் வரும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு, மருத்துவமனை வளாகத்துக்குள் இட வசதியில்லை; ரோட்டில் நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண, மருத்துவமனைக்கு எதிரே வாலாங்குளத்தின் கரையில் வாகனங்கள் நிறுத்த வசதி ஏற்படுத்தி தருவதாக, மாநகராட்சி நிர்வாகம் கூறியது.

அப்பகுதியில் கான்கிரீட் கற்கள் பதித்து, இட வசதி ஏற்படுத்தப்பட்டது; அமைச்சர் செந்தில்பாலாஜி, சில நாட்களுக்கு முன் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இரு சக்கர வாகனங்கள் இரண்டு மணி நேரத்துக்கு நிறுத்த, 10 ரூபாய்; கூடுதலாக நிறுத்தப்படும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும், 5 ரூபாய். நான்கு சக்கர வாகனங்களுக்கு, 30 ரூபாய்; கூடுதலாக நிறுத்தப்படும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும், 15 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள். உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுவோருக்கு உதவி செய்ய ஒருவர் உடன் இருப்பது வழக்கம். அவர்களது வாகனமே ரோட்டில் நிறுத்தப்படுகின்றன.

அவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு இட வசதி ஏற்படுத்திக் கொடுத்து, கட்டணம் கேட்பது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதவிர, காய்ச்சல், மருந்து, மாத்திரை வாங்க வருவது உள்ளிட்ட சேவைகளுக்கு வருவோர் வாகனங்களை நிறுத்துகின்றனர். ஒருவர் இரு சக்கர வாகனத்தை, 12 மணி நேரம் நிறுத்தினால், 60 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக, வாகனங்கள் நிறுத்த யாரும் முன்வருவதில்லை

 அரசு மருத்துவமனை முன்பே தொடர்ந்து நிறுத்தப்படுகின்றன; எப்போதும் போல் போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது.

அரசு மருத்துவமனைக்குள் புதிது புதிதாக கட்டடங்கள் கட்டப்படுகின்றன. வாகனங்கள் நிறுத்த வசதி செய்து கொடுக்க வேண்டியது மருத்துவமனை நிர்வாகத்தின் பொறுப்பு; போதிய வசதி இல்லாததால், மாநகராட்சி நிர்வாகம் முன்வந்தது. ஆனால், கட்டணம் நிர்ணயித்து வருவாய் ஈட்ட முயற்சிப்பதால், எதற்காக இவ்வசதி ஏற்படுத்தப்பட்டது என்கிற நோக்கமே சிதைந்து விட்டது.