அரசு பள்ளி கட்டுமான பணியின் போது லிப்டில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

0
17

கோவை, டிச. 18: கோவை கோவைப்புதூர் குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் வடமாநில தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் கட்டிடத்தின் 3வது தளத்தில் லிப்ட் மூலம் சிமெண்ட் ஏற்றி சென்று இறக்கும் பணி நடந்தது. இதில் ஒடிசா மாநிலம், கஞ்சம் பகுதியை சேர்ந்த ரமேஷ் மாலிக் (25) என்ற ஊழியர் ஈடுபட்டிருந்தார். அவர் சிமெண்ட் மூட்டைகளை இறக்கியபோது தவறி 3வது தளத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடினார். சக தொழிலாளர்கள் அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.