அரசு பள்ளியில் சத்துணவு மையத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள்

0
67

கோவை மாவட்டம் வால்பாறை அருகில் உள்ள முருகன் எஸ்டேட் பகுதியை சுற்றியுள்ள வனப்பகுதிக்குள் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளது. இந்த யானைகள் கூட்டம் நேற்று அதிகாலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. குடியிருப்பு பகுதிக்கு அருகில் இருந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தின் சுற்றுச்சுவரையும், நுழைவு வாயில் சுவரை கேட்டுடன் உடைத்து உள்ளே புகுந்துள்ளது. பள்ளி வளாகத்தில் இருந்த சத்துணவு மையத்தின் கதவையும் ஜன்னலையும் உடைத்து உள்ளே இருந்த சத்துணவு மையத்தின் பொருட்களை உடைத்து சேதப்படுத்தி விட்டு உள்ளிருந்த 50 கிலோ சத்துணவு அரிசி மூட்டையை வெளியே எடுத்து தின்று விட்டு மீதி அரிசிகளை அந்த பகுதி முழுவதும் இறைத்தது. இதனை கவனித்த தோட்டத் தொழிலாளர்கள் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இந்த காட்டு யானைகள் கூட்டம் அருகில் உள்ள வனப்பகுதியில் முகாமிட்டு நின்று வருகிறது.