உணவு திருவிழா
உலக உணவு தினத்தையொட்டி பொள்ளாச்சி அருகே உள்ள தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உணவு திருவிழா நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கி உணவு திருவிழாவை தொடங்கி வைத்தார். இதில் உடலுக்கு நன்மை தரும் உணவுகள், தீமை தரும் உணவுகள் என்ற தலைப்புகளில் பல்வேறு வகையான உணவு பெருட்களை மாணவ-மாணவிகள் கொண்டு வந்து காட்சிப்படுத்தினர்.
கண்காட்சியை ஊர்பொதுமக்கள், பெற்றோர்களும் கண்டு ரசித்தனர். மேலும் உண்ணும் உணவை நமக்கு அளித்த விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மகாலட்சுமி, உஷா, மனுவேல்ராஜன் ஆகியோர் செய்திருந்தனர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:-
ஆரோக்கியமான வாழ்வு
பள்ளி மாணவ-மாணவிகள் தற்போது துரித உணவு கடைகளின் உணவுகளை அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர். இதை தவிர வெளிநாட்டு உணவுகள் மீதும் அவர்களுக்கு மோகம் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக 20 வயதிற்கு மேலானவர்கள் சர்க்கரை, நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். எனவே குழந்தைகளுக்கு நன்மை தரும் உணவு, தீமை தரும் உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உணவு திருவிழா நடத்தப்பட்டது.
தாத்தா, பாட்டி மற்றும் முன்னோர்கள் அதிகமாக சோளம், கம்பு, ராகி, வரகு, திணை, சாமை போன்ற சிறு தானியங்களை உணவில் சேர்த்துக்கொண்டனர். இதனால் நோய் பாதிப்பு இல்லாமல் நீண்ட காலம் வாழ்ந்தனர். எனவே மாணவ-மாணவிகள் நூடுல்ஸ் பேன்ற துரித உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்டு உள்ள பொருட்களை அதிகமாக எடுத்துக்கொள்ள கூடாது. பாரம்பரிய உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.