அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கி. .. வருஷம் எட்டாச்சு! புதிய பாடப்பிரிவுகள் துவங்காததால் ஏமாற்றம்

0
7

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கப்பட்டது முதல், ஐந்து பாடப்பிரிவுகளோடு செயல்படுகிறது. ஆண்டுதோறும் புதியபாடப்பிரிவுகள் துவங்கும் என எதிர்பார்ப்போடு காத்திருக்கும் மாணவர்கள் ஏமாற்றமடைகின்றனர். வரும் கல்வியாண்டிலாவது புதிய பாடப்பிரிவுகள் துவங்கப்படுமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பொள்ளாச்சி பகுதியில், ஆண்டுதோறும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதி வெற்றி பெற்று, கல்லுாரி படிப்பை தொடர்கின்றனர். வளர்ந்து வரும் நகரமாக உள்ள பொள்ளாச்சியில், அரசு கலைக்கல்லுாரி, பாலிடெக்னிக் கல்லுாரிகள் இல்லாததால், தனியார் கல்லுாரியை நாடும் நிலை இருந்தது.

சமத்துார் ராமஐயங்கார் மேல்நிலைப் பள்ளியை, அரசு கல்லுாரியாக மாற்ற வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் சட்டசபையில் பேசி வலியுறுத்தினார்.இதன் அடிப்படையில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், பாரதியார் பல்கலை உறுப்பு கல்லுாரி துவங்கப்பட்டது.

5 பாடப்பிரிவு

முதற்கட்டமாக, பி.காம்.,(சிஏ), பி.காம்.,(பிஏ), பி.பி.ஏ., பி.எஸ்சி., (கணிதம்), பி.ஏ., (ஆங்கிலம்) ஆகிய பாடப் பிரிவுகளுடன் துவங்கப்பட்டன. இதை தொடர்ந்து, பாரதியார் பல்கலை கல்லுாரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியாக மாற்றப்பட்டது. அதன் பின், நான்கு ஏக்கர் பரப்பளவில், 8 கோடியே, 95 லட்சத்து, 50ஆயிரம் ரூபாயில், கல்லுாரிக்கு நிரந்தர கட்டடம் கட்டப்பட்டது.

புதிய கட்டடம் திறக்கப்பட்டு, கடந்த சில ஆண்டுகளாக அங்கு கல்லுாரி செயல்பட்டு வருகிறது. புதிய கட்டடம் கட்டப்பட்டாலும், இன்னும் அதே ஐந்து பாடப்பிரிவுகளோடு கல்லுாரி செயல்படுகிறது.புதியதாக பாடப்பிரிவுகள் துவங்கப்படும் என ஆண்டுதோறும் எதிர்பார்ப்புகள் இருந்தாலும், இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஆண்டுகள் ஓடுது

கல்வி ஆர்வலர்கள் கூறியதாவது:

ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் வசதிக்காக, பாரதியார் பல்கலை உறுப்பு கல்லுாரியாக கடந்த, 2017ம் ஆண்டு துவங்கப்பட்டது.

அதன்பின், 2020ம் ஆண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியாக மாற்றப்பட்டது. உறுப்பு கல்லுாரியாக மூன்று ஆண்டுகளும், அரசு கல்லுாரியாக மாறி ஐந்து ஆண்டுகளாகியும் இன்னும் புதிய பாடப்பிரிவுகள் வரவில்லை.

கல்லுாரி துவங்கியது முதல் ஐந்து பேட்ஜில், 2,400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் முடித்து வெளியேறியுள்ளனர். ஆனால், புதிய பாடப்பிரிவுகள் துவங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மட்டும் பூர்த்தியாகவில்லை.

அரசு கவனிக்குமா?

பி.சி.ஏ., பி.எஸ்சி., கணினி அறிவியல், பி.ஏ., பொருளாதாரம், வரலாறு உள்ளிட்ட பாடப்பிரிவுகள் துவங்கினால், அதிகளவு மாணவர்கள் பயன்பெற முடியும். பி.எஸ்சி., கணினி அறிவியல் தனியார் கல்லுாரியில் படிக்க அதிக கட்டணம் செலுத்த வேண்டும்; அதே அரசு கல்லுாரியில் குறைந்த கட்டணத்தில் படிக்கலாம்.

அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்கும் என ஆண்டுதோறும் எதிர்பார்த்து, மாணவர்கள் ஏமாற்றமடைவது வழக்கமாகியுள்ளது. இதனால், கல்லுாரியில் உள்ள ஐந்து பாடப்பிரிவுகளில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்து படிக்கும் நிலை உள்ளது.

மேலும், மாணவர்கள் முதுகலை படிப்புக்கு, தனியார் கல்லுாரிகளையே நாட வேண்டிய நிலை உள்ளது. கட்டடம் இருந்தும், அதற்கான பாடப்பிரிவுகள் துவங்காததால், ஏழை மாணவர்களின் உயர்கல்வி முழுமை பெற முடியாத நிலை உள்ளது.

அரசு உரிய கவனம் செலுத்தி புதிய பாடப்பிரிவுகள் துவங்க நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.

இவ்வாறு, கூறினர்.