கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கோவை மட்டுமின்றி நீலகிரி, திருப்பூர், ஈரோடு மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த ஏழை- எளிய மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். குறிப்பாக பன்றி மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற கேரளாவில் இருந்தும் இங்கு வருகிறார்கள்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆதரவற்ற 62 வயது மூதாட்டி ஒருவர் மேட்டுப்பாளையம் பகுதியில் கால்களில் புண்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை சிலர் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்குள்ள பெண்கள் வார்டில் அந்த மூதாட்டி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அந்த மூதாட்டி நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவருடைய பெயர், விவரம், அவருடைய முகவரி குறித்த தகவல் எதுவும் கிடைக்காததால் உடலை அந்த வார்டில் இருந்து பிணவறைக்கு கொண்டு செல்லாமல் அங்கேயே தரையில் ஊழியர்கள் போட்டு வைத்தனர்.
அப்போது அந்த வார்டில் சுற்றித்திரிந்த ஒரு பூனை இறந்த மூதாட்டியின் காலில் புண் இருந்த பகுதி மற்றும் கட்டை விரலை கடித்து குதறியது. இதை, அந்த வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் அங்குள்ள ஊழியர்களிடம் தெரிவித்தனர். ஆனாலும் அவர்கள் அந்த மூதாட்டியின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்த முன்வரவில்லை.
உடனே நோயாளிகளின் உறவினர்கள் தங்கள் செல்போன்களில் அந்த சம்பவத்தை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். அத்துடன் அவர்கள் அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் அந்த மூதாட்டியின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு தகராறு செய்தனர். அதன் பின்னர்தான் அந்த மூதாட்டியின் உடல் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், இறந்துபோன மூதாட்டியின் உடலை பூனை கடித்து குதறும் வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த வீடியோவை பார்த்த அரசு உயர் அதிகாரிகள் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கேட்டறிந்ததுடன், இந்த சம்பவத்துக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
இதற்கிடையே, கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘கோவை அரசு ஆஸ்பத்திரியில் இறந்த மூதாட்டியின் உடலை பூனை கடிக்கவில்லை. இதுதொடர்பாக வெளியாகி உள்ள வீடியோவும், புகைப்படமும் தவறானவை ஆகும். மூதாட்டியின் உடலை பூனை கடித்ததாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை. ஆஸ்பத்திரி வளாகத்தில் நாய்கள் மற்றும் பூனைகள் சுற்றித்திரிகின்றன. அவற்றை பிடிக்க ஏற்கனவே மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதுபோன்று இங்கு சிகிச்சைக்கு வருபவர்கள் செல்போன் எடுத்து வர தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது’ என்றார்.