பொக்கிஷங்களை பாதுகாக்க அரசின் கட்டுப்பாட்டில் தான் கோவில்கள் இருக்க வேண்டும் என்று கோவையில் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
கோவில்களுக்கு கும்பாபிஷேகம்
பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்றுவிட்டு சென்னை செல்வதற்காக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கார் மூலம் கோவை விமான நிலையம் வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதுவரை 447 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு உள்ளது. தமிழில் கும்பாபிஷேகம் நடத்த ஒரு குழு அமைக்க கோர்ட்டு அறிவுறுத்தி இருக்கிறது.
அதன்படி குழு அமைக்கப்பட்டு, தமிழில் கும்பாபி ஷேகம் நடத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நிலங்கள் அளவீடு
தி.மு.க. ஆட்சியில் 282 சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன. வெளி நாடுகளில் உள்ள 62 சிலைகளை மீட்டு தமிழகத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள ஒரு தொழிலதிபர் வீட்டில் இருந்து 10 சிலைகள் மீட்கப்பட்டு இருக்கிறது. உரிய ஆவணங்களை ஒப்படைத்தால் சிலைகள் அந்தந்த கோவில்களில் ஒப்படைக்கப்படும். தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான 3 லட்சத்து 54 ஆயிரம் ஏக்கர் நிலங்களை அளவீடு செய்யும் பணி தொடங்கப் பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் 29 யானை கள் உள்ளன.
அதில் 26 கோவில்களில் அந்த யானைகள் குளிக்க தொட்டி உள்ளிட்ட வசதிகளும், மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் யானைகளுக்காக நடைபாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே யானைகள் புத்துணர்வு முகாம் தேவையற்ற ஒன்றாக மாறிவிட்டது.
அரசின் கட்டுப்பாடு
கோவில்களை நிர்வாகம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை உள்ளது. எனவே அரசின் கட்டுப்பாட்டில் கோவில்கள் இருந்தால் தான் கட்டுப்பாட்டுடன் இருக்கும். மேலும் கோவில்களில் எந்த காலத்திலும் உருவாக்க முடியாத பொக்கிஷங்கள் பல உள்ளன. அவை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் கோவில்கள் கண்டிப்பாக அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும்.
நாட்டில் ஏதாவது ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியலில் தி.மு.க.வுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தினால் அதன் மூலம் இந்துக்கள் தங்கள் பக்கம் திரும்பி விடுவார்கள் என்று நினைத்து சிலர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த ஆட்சியை பொருத்தவரை தடுமாறாத, ஒரு இரும்பு மனிதர் வழிநடத்திக் கொண்டு இருக்கிறார். எனவே அவர்களின் எதிர்பார்ப்பு எந்த காலத்திலும் நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.