சொர்க்கவாசல் திறப்பு
பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ் வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று அதிகாலையில் நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாத சுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி 5 சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி விழா, மாசிமக திருத்தேர் போன்றவை வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி காலை திருமொழி திருநாள் தொடக்கம் எனும் பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது. வருகிற 11-ந் தேதி வரை விழா நடைபெற உள்ளது.
அரங்கநாத பெருமாள்
இதையொட்டி நேற்று முன்தினம் அரங்கநாத பெருமாள் நாச்சி யார் கோலம் என்னும் (பெண் வேடம் தரித்து) மோகனாவதாரம் பூண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று அதிகாலை 5.30 மணியளவில் நடைபெற்றது.
அங்கு அதிகாலையில் திரண்டு இருந்த பக்தர்கள் சங்குகள், முழங்க கோவிந்தா… கோவிந்தா… என்று எழுப்பிய கோஷம் விண்ணை பிளந்தது. இதைதொடர்ந்து அரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளி சொர்க்க வாசல் வழியாக வநது பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அவதாரங்கள்
இதையடுத்து கோவிலின் நான்கு ரத வீதிகளில் அமைக்கப்பட்டு இருந்த சுமார் 30 சமூக பந்தல்களில் அரங்கநாத பெருமாள் எழுந்தருளினார். சமுதாய மக்களின் சிறப்பு பூஜைக்கு பின்னர் மீண்டும் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வரும் 8 நாட்களும் ராஜ அலங்காரம், வாமன அவதாரம், நரசிம்மர் அவதாரம், ராமா வதாரம், பலராமர் அவதாரம், வெண்ணெய் தாழி கிருஷ்ணன், தவழ் கிருஷ்ணன், குதிரை வாகன உற்சவம் உள்ளிட்ட 8 அவதாரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
கோவை கோவில்கள்
இதில், கோவை பாப்பநாயக்கன்பாளையம் சீனி வாச பெருமாள் கோவில், ஜெகநாத பெருமாள் கோவில், ராம்நகர் கோதண்ட ராமர் கோவில், சிங்காநல்லூர் வரதராஜபுரத்தில் உள்ள வரத ராஜ பெருமாள் கோவில், உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்பட கோவையில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அங்கு அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.