அய்யப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு-பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

0
88

கார்த்திகை மாத பிறப்பையொட்டி பொள்ளாச்சி அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மேலும் சபரிமலைக்கு செல்ல 766 பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள்.

தங்க கவசம்

கார்த்திகை மாதம் பிறந்து 1-ந்தேதி முதல் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று அய்யப்பனை தரிசிப்பார்கள். இதையொட்டி பொள்ளாச்சி வெங்டேசா காலனியில் உள்ள அய்யப்பன் கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. காலை 8 மணிக்கு அய்யப்பனுக்கு பால், தயிர், நெய், பஞ்சாமிர்தம், சந்தனம், இளநீர், பன்னீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.

மாலை அணிந்துகொண்டனர்

அதை தொடர்ந்து அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து, தங்க கவசம் சாத்தப்பட்டது. இதையடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல அதிகாலை முதலே, மாலை அணிய தொடங்கினர். சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை 766 அய்யப்ப பக்தர்களுக்கு குருசாமி மாலை அணிவித்தார். மாலை அணிந்துகொண்ட பக்தர்கள் விரதத்தை தொடங்கினார்கள்.

இதன் காரணமாக கோவில் முன் உள்ள கடைகளில் வேஷ்டிகள், மாலைகள் விற்பனை மும்முரமாக இருந்தது. மேலும் கார்த்திகை மாதத்தையொட்டி தினமும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.