தொண்டாமுத்துார்: புதுடில்லியில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு சந்தித்து பேசினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, மரியாதை நிமித்தமாக, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு நேற்று முன்தினம், புதுடெல்லியில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின்போது, அமித்ஷாவிற்கு, ஆதியோகியின் திருவுருவ சிலையை, சத்குரு பரிசாக வழங்கினார்.
இச்சந்திப்பு குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில், ‘சத்குருவை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்திய ஆன்மிகம் குறித்தும், சமூகங்களை மாற்றி அமைப்பதில் அதன் பங்களிப்பு குறித்தும் கலந்துரையாடினோம்’ என பதிவிட்டுள்ளார்.
அதேபோல, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள பதிவில், ‘பாரதத்தின் மாண்புமிகு உள்துறை அமைச்சரை சந்தித்ததில் மகிழ்ச்சி. நமது தேசத்தின் நாகரீக அம்சங்களில், அவரது ஈடுபாடும் ஆர்வமும் போற்றத்தக்கது’ என பதிவிட்டுள்ளார்.