அமெரிக்காவின் இரட்டை கோபுர விபத்தை நினைவூட்டும் ‘யுனைடட் 93’

0
121

அமெரிக்காவின் இரட்டை கோபுர விபத்தை நினைவூட்டும் ‘யுனைடட் 93’

பயங்கரவாதிகள் தாக்குதலுக்காக கடத்திய நான்கு விமானங்களில் ஒன்று தான் ‘யுனைடட் ஏர்லைன்ஸ் 93’. இந்த விமானம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டாலும் திட்டமிட்ட தாக்குதல் இலக்கை அடையவில்லை. ஏன்? என தெரிந்து கொள்ள வேண்டுமா?
நான் டேக் ஆப் கியரை அழுத்துகிறேன். நீங்கள் சீட் பெல்ட்டை இறுக்கமாக கட்டிக் கொள்ளுங்கள். நாம் யுனைடட் 93-யில் பயணிப்போம்.
சியாத் ஜர்ரா, சயீத் அல்-கம்தி, அஹ்மத் அல்-நமி மற்றும் அஹ்மத் அல்-ஹஸ்வாவி ஆகிய நான்கு பயங்கரவாதிகளும் தாங்கள் தங்கியிருந்த ஓட்டல் அறையில் பிரார்த்தனை செய்வதாக தொடங்குகிறது முதல் காட்சி. பிரார்த்தனைக்கு பிறகு நியூயார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் இவர்கள் விமானநிலைய பாதுகாப்பு சோதனை களுக்கு பிறகு பயணிகளோடு பயணிகளாக நியூ ஜெர்சியிலிருந்து சான்பிரான்சிஸ்கோ செல்லும் விமானத்தில் ஏறி அவரவர் இருக்கையில் அமர்கின்றனர். சில டிராபிக் பிரச்சினை களால் விமானம் 40 நிமிடங்கள் தாமதமாக புறப் படுகிறது.
சற்று நேரத்தில் விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு பாஸ்டன் நகரிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் மீது பறந்து கொண்டிருக்கும் விமானம் ‘அமெரிக்கன் 11’ கடத்தப்பட்ட செய்தி கிடைக்கிறது. பின் சிறிது நேரத்தில் காலை 8.46 மணிக்கு அந்த விமானம் உலக வர்த்தக மைய கட்டிடத்தின் வடக்கு பகுதியில் மோதுகிறது.
இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அடுத்த 18-வது நிமிடத்தில் உலக வர்த்தக மைய கட்டிடத்தின் தெற்கு பகுதியை ‘யுனைடட் 175’ விமானம் தாக்குகிறது.
என்ன நடந்து கொண்டிருக்கிறது? அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என அதிகாரிகள் யோசிக்கும் முன்பு அமெரிக்க ராணுவ தலைமையகத்தின் மீது, 9.45 மணிக்கு நிகழ்கிறது அடுத்த தாக்குதல். இதற்கு பயன்படுத்தப்பட்ட விமானம் ‘அமெரிக்கன் 77’.
இப்படி காட்சிகளின் ரன்வேயில் படிப்படியாக பதற்றத்தை டேக் ஆப் செய்யும் இயக்குனர் ‘பவுல் கிரீன் கிராஸ்’ நம்மை ‘யுனைடட் 93’ விமான இருக்கையில் சீட்பெல்ட்’டால் கட்டிப் போட்டு மிரட்டுகிறார்.
அமெரிக்க வான் எல்லையில் பறந்து கொண்டிருக்கும் அனைத்து விமானங்களும் அவசர அவசரமாக தரையிறங்க கட்டளைகள் கொடுக்கப்படுகிறது.
இப்போது ‘யுனைடட் 93’ 35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறது. பயணிகளுக்கு சகஜமாக உணவுகள் பரிமாறப்படுகின்றன. பயணி களோடு பயணிகளாக அமர்ந்திருந்த நான்கு பயங்கரவாதிகளும் சரியான தருணத்திற்காக காத்திருக்கின்றனர். விமான பணிப்பெண்கள் சுறுசுறுப்பாக பயணிகளுக்கு உதவிக் கொண்டிருக்கின்றனர்.
பயங்கரவாதிகளில் ஒருவன் விமானத்தின் கழிவறைக்குள் சென்று அவசர அவசரமாக ஒரு போலி வெடிகுண்டை உருவாக்கி தன் இடுப்பில் கட்டிக் கொண்டு தன் இருக்கையில் வந்தமரு கிறான்.
உலக வர்த்தக மைய கட்டிடம் தாக்கப்பட்ட செய்தி ‘யுனைடட் 93’ விமானிகளின் காக்பிட் அறைக்கு அனுப்பப்படுகிறது. அவர்கள் “இந்த கத்துகுட்டி விமானிகள் இப்படித் தான் செய்வார்கள்” என பிரச்சினையின் தீவிரம் அறியாமல் அதை ஒரு செய்தியாக மட்டும் எடுத்துக் கொண்டு விமானத்தை தொடர்ந்து செலுத்துகின்றனர்.
தாக்குதலுக்கு காத்திருந்த நால்வரில் இருவர் சட்டென எழுந்து பயணிகளை கண்ணிமைக்கும் நொடியில் தாக்கத் தொடங்குகின்றனர். ஒரு பயணி கத்தியால் கழுத்தில் பலமாக தாக்கப்படுகிறார். இருவரில் ஒருவன் இடுப்பில் கட்டியிருந்த செயற்கை வெடிகுண்டை காட்டி பயணிகளை மிரட்டிக் கொண்டிருக்கும் இடைவெளியில் மற்ற இரு பயங்கரவாதிகளும் விமானிகளின் காக்பிட் அறையை கைப்பற்றுகின்றனர். பைலட்டுகள் இருவரும் கொல்லப்பட்டு விமானம் பயங்கரவாதிகளின் முழு கட்டுப்பாட்டுக்குள் சில நிமிடங்களில் கொண்டு வரப்படுகிறது.
விமான நிலைய கட்டுப்பாட்டு அறையிலிருந்து ‘யுனைடட் 93’ விமானத்தை தொடர்புகொள்ளும் அதிகாரிகள் எந்த தகவலும் கிடைக்காமல் திணறுகின்றனர். அவர்கள் “இந்த விமானமும் கடத்தப் பட்டிருக்குமோ?” என சந்தேகிக்கின்றனர். இதற்கிடையில் அதிகாரிகளுக்கு ஆடியோ ஒன்று கிடைக்கிறது. அதில் “எங்களின் திட்டப்படியே விமானம் பறக்கிறது” என ஒரு குரல் ஒலிக்கிறது. அப்படியானால் இன்னும் எத்தனை விமானங்கள்? என அமெரிக்கா நடுங்கி நிற்கிறது.
‘யுனைடட் 93’ விமானத்தில் இருக்கும் பயணிகளுக்கு செல்பேசிகள் மூலம் வர்த்தக மைய தாக்குதல் மற்றும் பெண்டகன் இடிக்கப்பட்ட செய்தி கிடைக்கிறது. அப்போது தான் பயணிகளுக்கு உரைக்கிறது
“விமானம் கடத்தப்படவில்லை என்பதை உணர்ந்து கொள்கிறார்கள். நாம் ஒரு தற்கொலை தாக்குதல் எந்திரத்தில் பறந்து கொண்டிருக்கிறோம். இனி இந்த விமானம் தரையிறங்காது”.
பயணிகள் கூட்டாக திட்டமிட்டு பயங்கரவாதி ஒருவனை தாக்கி கொல்கின்றனர். அவனது இடுப்பில் இருந்தது ஒரு டம்மி பாம் என்றும் தெரியவருகிறது. துணிச்சலாக இன்னொருவன் மீதும் பாய்ந்து தாக்குகிறார்கள்.
அதேசமயம் விமானி அறையில் இருக்கும் இரண்டு பயங்கரவாதிகளும் விமானத்தை அதி வேகத்தில் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். இன்னும் 20 நிமிட தூரத்தில் இலக்கு. அது வெள்ளை மாளிகையா? வேறு இடமா? என்பது தெரியாதபட்சத்தில் விமானம் உச்சபட்ச வேகத்தை அடைகிறது. அதற்குள் பயணிகள் கூட்டாக இணைந்து பைலட் அறையை உடைத்து உள்நுழைகின்றனர். விமானத்தை செலுத்திக் கொண்டிருந்த மற்ற இரு பயங்கரவாதிகளின் மீதும் பாய்ந்து அவர்களை தாக்கியதும் ‘யுனைடட் 93’ விமானம் மொத்த கட்டுப்பாட்டையும் இழந்து, பென்னிசில்வேனியா நகரின், சாங்க்ஸ்விலே என்ற பகுதியில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகிறது. விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாகிறார்கள். இப்போது நீங்கள் சீட் பெல்ட்டை தளர்த்திக் கொள்ளலாம். இனி இந்த விமானம் ஒருபோதும் பறக்காது.
“விபத்துக்குபின் கிடைத்த கருப்புப் பெட்டி இப்படத்தின் திரைக்கதைக்கு பெரிதும் உதவி இருக்கிறது. அதே நேரத்தில் துல்லியமாக விமானத்துக்குள் நடந்ததைத் தான் நாங்கள் படமாக்கினோம் என்று சொல்லவில்லை, கதைக்காக சில கதாபாத்திரங்கள் சேர்க்கப்பட்டது என்னவோ உண்மைதான்” என்கிறது இப்படக்குழு.
லண்டன் பிலிம் கிரிடிக்ஸ் சர்க்கிள் விருது உட்பட பல்வேறு சர்வதேச விருதுகளை படத்தின் இயக்குனர், பவுல் கிரீன் கிராஸ் பெற்றார். இவருடைய ப்ளடி சண்டே, கேப்டன் பிலிப்ஸ் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை. சிறந்த படத் தொகுப்புக்கான விருது யுனைடட் 93 படத்துக்காக ரிச்சர்டு பியர்சன் உள்ளிட்டோருக்கு கிடைத்தது. வரலாறு மற்றும் சமீபத்திய நிஜ சம்பவங்களை தனது படங்களில் பிரதிபலிக்கும் பவுல், தொடக்க காலத்தில் டி.வி. நிகழ்ச்சிகளை இயக்கினார். இப்போதும் ஏதோ ஒரு திரைப்பட விழாவில் இவரது ‘யுனைடட் 93’ பறந்து கொண்டுதானிருக்கிறது.