அனைத்து படிப்பையும் அறிந்து கொள்ள அரிய வாய்ப்பு ; ‘தினமலர்’ உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி இன்றே கடைசி

0
6

கோவை; உயர்கல்விக்கு ஆலோசனை தரும் ‘தினமலர்’ வழிகாட்டி நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. அனைத்து வகை படிப்புகள் குறித்தும் கல்வியாளர்களிடம் ஆலோசனை பெற, இன்று(மார்ச் 28) அரிய வாய்ப்பாகும்.

பிளஸ் 2க்குப்பின் உயர் கல்வியில் என்ன படிப்புகளை தேர்வு செய்யலாம், எங்கு படிக்கலாம் என பயனுள்ள கல்வி ஆலோசனைகளை ‘தினமலர்’ நாளிதழ் அள்ளி வழங்கி வருகிறது. ‘தினமலர்’ நாளிதழ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில், ‘தினமலர்’ வழிகாட்டி கருத்தரங்கு மற்றும் கண்காண்ட்சி கொடிசியா ‘இ’ அரங்கில் இரண்டாவது நாளாக நேற்று நடந்தது.

இரண்டாம் நாளான நேற்று காலை 9:00 மணி முதல் பெற்றோர், மாணவர்கள் ஆர்வமுடன் வரத்துவங்கினர். கருத்தரங்கில், பல்வேறு தலைப்புகளில் பேசிய பேச்சாளர்களின் கருத்துக்களை கேட்க பெற்றோர், மாணவர்கள் கூடியதால் நேற்று அரங்கு நிரம்பி வழிந்தது.

கருத்தரங்கை, ‘தினமலர்’ நாளிதழுடன், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்குகிறது. பவர்டு பை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், அமிர்தா பல்கலை, அசோசியேட் ஸ்பான்சராக ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங், தொழில்நுட்பக் கல்லுாரி உள்ளது.ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லுாரி, கே.எம்.சி.எச்., அண்ட் டாக்டர் என்.ஜி.பி., கல்வி நிறுவனங்கள், கற்பகம் கல்வி நிறுவனங்கள், கோவை எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனங்கள், ரத்தினம் குழும கல்வி நிறுவனங்கள், பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி, கோவை சி.எம்.எஸ்., கல்வி நிறுவனங்கள், திருப்பூர் கே.எம்.சி., சட்டக்கல்லுாரி, ராஜலட்சுமி தொழில்நுட்பக்கல்லுாரி, இந்திய பட்டயக்கணக்காளர்கள் இன்ஸ்ட்டிடியூட் இணைந்து வழங்குகின்றன. வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம்.

நிகழ்ச்சியில், கோவை எல் அண்ட் டி பைபாஸ் ரோடு, ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங் மற்றும் தொழிநுட்பக் கல்லுாரி சார்பில், மாணவர்கள் பயன்பெறும் வகையில், ரோபோட்டுகளின் செயல் விளக்கம் வழங்கப்படுகிறது.

விண்ணப்பம் முதல் அட்மிஷன் வரை

கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில், கல்வியாளர்களும், கல்வி நிறுவன பிரதிநிதிகளும், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க உள்ளனர். மொத்தம், 138 கல்லுாரி அரங்குகளில் படிப்புகள் குறித்து, விளக்கம் அளிக்கப்படுகிறது. படிப்புகளின் விபரங்கள் அடங்கிய கையேடுகள், கல்லுாரி அரங்குகளில் வழங்கப்படும். கல்லுாரிகளின் சேர்க்கை குறித்த சந்தேகம் தீர்க்கப்படும். ஒவ்வொரு படிப்புக்கும் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் விண்ணப்பிக்கும் முறை, கல்வி, விடுதி கட்டணம் உட்பட அனைத்து விபரங்களையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்ளலாம்.

கருத்தரங்கில் இன்று

இன்று கருத்தரங்கில், மின்சார வாகனம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் எனும் தலைப்பில், செந்தில்ராஜா, 21ம் நுாற்றாண்டின் திறன்கள் குறித்து, உதயசங்கர், நீங்கள் வெல்ல முடியும் என்ற தலைப்பில், வேலுமணி, வேலைவாய்ப்பு வழங்கும் கல்விகள் குறித்து கல்வி ஆலோசகர் ரமேஷ்பிரபா, கல்விக்கடன்கள் குறித்து விருத்தாசலம் ஆகியோர் பேசுகின்றனர்.இன்று மூன்றாம் நாளுடன் வழிகாட்டி நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையில், கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடக்கிறது. பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் பெற்றோர், அனைத்து வகை படிப்புகள் குறித்தும், ஆலோசனைகளை நேரில் பெற இன்றைய நிகழ்ச்சியை தவறவிடாமல், தெரிந்து கொள்ள அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.