அனைத்து கல்லூரிகளிலும், போதை பொருட்கள் தடுப்பு கமிட்டி அமைக்க வேண்டும் – போலீஸ் கமிஷனர் பேச்சு

0
99
கல்லூரிகளில் ராக்கிங் தடுப்பு மற்றும் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு போலீஸ் கமிஷனர் சுமித்சரண் தலைமை தாங்கி பேசியதாவது:-
கோவை மாநகரில் கல்லூரி பகுதிகளில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிந்தால் கல்லூரி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். கோவையில் போதை பொருள் கட்டுப்பாடு சிறப்பு குழு உள்ளது. அவர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி கஞ்சா விற்றதாக 2 கல்லூரிகளை சேர்ந்த 6 மாணவர்களை கைது செய்தனர்.
கோவையில் உள்ள கல்லூரிகளுக்குள் போலீசார் நுழைய விரும்பவில்லை. ஆனால் கல்லூரி நிர்வாகத்தினர் தங்கள் வளாகத்தை போதை பொருள் புழக்கம் இல்லாத பகுதியாக வைத்துக்கொள்ள வேண்டும். போதை பொருட்களை பயன்படுத்தும் மற்றும் விற்கும் மாணவர்கள் பற்றிய தகவல்கள் இருந்தால் போலீசாருக்கு கல்லூரி நிர்வாகத்தினர் தெரியப்படுத்த வேண்டும். அப்போது தான் நட வடிக்கை எடுக்க முடியும். போதை பொருட்களை பயன்படுத்தினால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.
கோவை மாநகரம் போதை பொருள் இல்லாத நகரமாக மாற்ற போலீசார் செயல்பட்டு வருகிறார்கள். இதற்கு கல்லூரி நிர்வாகத்தினர் ஒத்துழைக்க வேண்டும். மாணவர்களிடையே போதை பழக்கத்தை ஒழிக்கும் வகையில் அனைத்து கல்லூரிகளிலும் விரைவில் போதை பொருட்கள் தடுப்பு கமிட்டி அமைக்க வேண்டும். அதில் தேசிய மாணவர் படை, தேசிய சமுதாய பணி உறுப்பினர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
கோவையில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து தகவல்கள் கிடைத்தால், கோவை மாநகர போலீசில் தனிப்பிரிவிற்கு தகவல் தெரிவிக்கலாம். இதற்காக 64842 00100 என்ற செல்போன் எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணன், கோவை மாநகர தலைமையிட துணை கமிஷனர் செல்வகுமார், குற்றப்பிரிவு துணை கமிஷனர் பெருமாள், மனநல ஆலோசகர் டாக்டர் மோனி மற்றும் கோவையில் உள்ள 54 கல்லூரிகளை சேர்ந்த நிர்வாகிகள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.