பி.ஏ.பி. கால்வாய் அருகே அனுமதியின்றி பதித்த குழாய்களை அகற்ற வேண்டும் என்று முறையீட்டுக்குழு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி பேசினார்கள்.
மேற்கு புறவழிச்சாலை
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முறையீட்டுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கினார். கூட்டத்தில், மேற்கு புறவழிச்சாலை பணிக்கு கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீட்டு தொகை வந்து விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் எந்த பணியும் தொடங்கவில்லை. பி.ஏ.பி. 3-ம் மண்டலத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு முன் கால்வாய் செல்லும் பகுதியில் பாலம் பணியை செய்ய வேண்டும்.
பொன்னாபுரம்-வடுகபாளையம் சாலையை விரிவாக்கம் செய்யும்போது பாசன கால்வாய் தொட்டியை இடித்து விட்டனர். மேலும் குடிநீர் குழாய் உடைக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கோர்ட்டு உத்தரவுபடி கால்வாயோரத்தில் புறம்போக்கு இடத்தில் அனுமதி இல்லாமல் பதிக்கப்பட்ட குழாய்களை அகற்ற வேண்டும்.
விவசாயிகள் அலைக்கழிப்பு
காட்டம்பட்டியில் ஆதிதிராவிடருக்கு 2 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது. அந்த இடத்தில் தனியார் ஒருவர் தென்னைநார் தொழிற்சாலை அமைத்து உள்ளார். ஆனால் பட்டா அந்த மக்கள் பெயரில் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை பெய்யும் போது ஓடை, காட்டாறு அருகில் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைக்க மின்சார வாரியம் தடையின்மை சான்று வாங்க வேண்டாம் என்று உத்தரவு உள்ளது.
ஆனால் பொதுப்பணித்துறையில் தடையின்மை சான்று வழங்கி வருமாறு கூறி விவசாயிகளை அலைக்கழிக்கின்றனர். பி.ஏ.பி. கால்வாய், ஆழியாற்றின் கரையோரம் அனுமதி கொடுக்கின்றனர். கொப்பரை தேங்காய் கொள்முதலை மீண்டும் தொடங்க பரிந்துரை செய்ய வேண்டும். திப்பம்பட்டி கால்நடை ஆஸ்பத்திரியில் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு உள்ளது. இதனால் மது அருந்தும் இடமாக மாறி உள்ளது.
தென்னையில் நோய் தாக்குதல்
கிழக்கு புறவழிச்சாலையில் கழிவுகளை கொட்டுவதை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படவில்லை. கிராமப்புறங்களில் நாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. தென்னையில் கேரள வாடல் நோய் உள்பட பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. இதை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தாவளத்தில் சாலை மோசமாக உள்ளதாக மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த சாலை சீரமைக்கப்படவில்லை. வேளாண் பொறியியல் துறை மூலம் ஆனைமலை பகுதிக்கு நெல் அறுவடை எந்திரம் கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.