அத்திக் கடவு திட்ட பாராட்டு விழா; 25 ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு

0
4

அன்னுார்; அத்திக்கடவு அவிநாசி கூட்டமைப்பு நடத்தும் பாராட்டு விழாவில், 25 ஆயிரம் பேர் பங்கேற்க, ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில், 1045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பும் அத்திக்கடவு அவிநாசி திட்டம் கடந்த ஆகஸ்ட் முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கி, துவக்கி வைத்த முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு, அத்திக்கடவு அவிநாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் சார்பில், வருகிற 9ம் தேதி கஞ்சப்பள்ளியில் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.பாராட்டு விழா மைதானத்தில், பொக்லைன் இயந்திரம் மற்றும் புல்டோசர் வாயிலாக 15 ஏக்கர் நிலத்தில் புதர்களை அகற்றி மண்மேடுகளை சமன்படுத்தும் பணி நடைபெற்றது. இதன் பிறகு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் வருகிற 9ம் தேதி காலை, 60 ஆண்டு கால அத்திக்கடவு போராட்டத்தின் புகைப்படங்கள், பத்திரிகை செய்திகள் அடங்கிய கண்காட்சி நடத்துதல், சிறுவர், சிறுமியர் மற்றும் ஆண்கள் பெண்கள் என 1,000 பேர் பங்கேற்கும் வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சி நடத்துதல், ஜமாப் மற்றும் திடும் இசை நிகழ்ச்சி நடத்துதல், போராட்டங்களில் பங்கேற்ற ஆர்வலர்களை கவுரவித்தல், முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தல், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலிருந்து 25 ஆயிரம் பேர் பங்கேற்க செய்வது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் அத்திக்கடவு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆர்வலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.